தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவு அலுவலகங்களில் ஆன்லைன் முறை அமல்படுத்திய 12 நாட்களில் 77,472 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளது.
இதன் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பத்திரப்பதிவுக்கு பல்வேறு இடையூறுகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அதாவது, இடைத்தரகர்களை அணுக சார்பதிவாளர்கள் சிலர் வலியுறுத்தி வந்ததாக தொடர்ந்து பல புகார்கள் வந்தன. அதையும் மீறி பத்திரம் பதிவு செய்ய நேரடியாக வரும் பொது மக்களை, பல்வேறு காரணங்களை கூறி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தினமும் பத்திரம், பதிய நடையாய் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைன் மூலம் பத்திர பதிவு செய்யும் முறையை பிப்ரவரி 12ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து சார்பதிவு அலுவலகங்களிலும் பிப்ரவரி 13ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு அமல்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்வதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டதால் பத்திரப்பதிவு குறைந்தே இருந்தது. ஆனால், சில நாட்களில் அந்த கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால், ஆன்லைனில் பத்திரப்பதிவு வேகமெடுக்க தொடங்கியது.
கடந்த பிப்ரவரி 13ல் 680 பத்திரங்களும்,
14ல் 1487,
15ல் 5920,
16ல் 5330,
19ல் 6941,
20ல், 5714,
21ல் 8174,
22ல் 7993,
23ல் 6818,
26ல் 10866,
27ல் 7550,
28ல் மட்டும் சென்னை மண்டலத்தில் 1403 பத்திரங்களும், கோவை 1424. மதுரை 1679, சேலம் 1216, நெல்லை 1061, வேலூர் 976, திருச்சி 852 கடலூர் 775, தஞ்சாவூர் 611 என மொத்தம் 9999 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது.
ஆக 12 நாட்களில் மொத்தம் 77,472 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆன்லைன் பத்திர பதிவை இன்னும் எளிமைப்படுத்தும் வகையில், அதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. இதற்காக, சார்பதிவாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்களிடம் பெறும் கருத்துக்களை அடிப்படையாக வைத்து ஆன்லைன் பத்திரப்பதிவை மேலும் எளிமைபடுத்த திட்டமிட்டிருப்பதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் மேலும் கூறிய விவரம் "ஆன்லைன் பத்திரப்பதிவு வெற்றிக்கு, பணியாளர்களின் பங்களிப்பை சார்ந்தே உள்ளது.பொதுமக்களுக்கு புதிய சேவையை விரைந்து வழங்கும், அலுவலர்களை கவுரவப்படுத்த, அவர்களின் புகைப்படங்களை, இணையதளத்தில் வெளியிடப்படும்/
மேலும் மாதத்துக்கு, 150க்கும் மேல் பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்கள்;அதற்கு குறைவாக பதிவாகும் அலுவலகங்கள் என, இரு பிரிவாக, இந்த கவுரவம் அளிக்கப்படும். இதற்கு தேர்வு செய்ய, ஐந்து அம்ச வழிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன என்றார்.