மதுரையில் போலீஸ் என்கவுன்டரில் இரு ரவுடிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மதுரைக்கு அருகில் உள்ள சிக்கந்தர் சாவடி பகுதியில் தற்காப்பிற்காக இந்த மோதல் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. வியாழக்கிழமையன்று மாலை சுமார் 4 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த இருவர் மீதும் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, ஆட்கடத்தல் உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததாகவும் அவர்கள் தீவிரமாகத் தேடப்பட்டுவந்ததாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
மதுரையிலிருந்து அலங்காநல்லூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது சிக்கந்தர் சாவடி. இங்குள்ள மந்தையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குற்ற வழக்குகளில் தேடப்படும் மந்திரி என்ற முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய இருவரும் தங்கியிருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து செல்லூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் மணிவண்ணன், துணை ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட ஆறு காவலர்கள் அந்த வீட்டிற்குச் சென்றபோது, அந்த வீட்டிற்குள் இருந்தவர்கள் கதவைத் திறக்க மறுத்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் ஜன்னலை உடைத்துள்ளனர். அப்போது, இந்த இருவரில் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக காவல்துறை தெரிவிக்கிறது.
"இதையடுத்து தற்காப்பிற்காக ஆய்வாளரும் துணை ஆய்வாளரும் தலா ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்தவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர்" என மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.
ஜன்னலை உடைக்கும்போது காவல்துறையினருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் அந்தக் காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மணிவண்ணன் கூறினார்.
முத்து இருளாண்டியும் சகுனி கார்த்தியும் தங்கியிருந்த வீடு மாயக் கண்ணன் என்ற மற்றொரு ரவுடியின் வசமிருந்த வீடு என்றும் அவர் தப்பி ஓடிவிட்டதால், அவரைத் தேடிவருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள்.