சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் 7 பேர் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி புதிய நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 7 புதிய நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஒதுக்கீடு 75 ஆகும். புதிய நீதிபதிகள் பதவியேற்றுக் கொள்ளும் முன்னர் இந்த எண்ணிக்கை 56 ஆக இருந்தது. எனவே மீதமுள்ள இடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய கொலிஜியத்திற்கு கடந்த 2016ல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அனுப்பினார்.
இந்த பட்டியலில் உள்ள 4 பேரின் பெயர் பரிந்துரை பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 7 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அறிவிப்பாணையை வெளியிட்டது.
அதில்,சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக
குமாரி. பி.டி.ஆஷா,
திரு .நிர்மல்குமார்,
திரு . சுப்ரமணியம் பிரசாத்,
திரு . என்.ஆனந்த் வெங்கடேஷ்,
திரு . ஜி.கே.இளந்திரையன்,
திரு . கிருஷ்ணன் ராமசாமி,
திரு . சி.சரவணன்
ஆகியோரை நியமனம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டார். இவர்கள் பதவி ஏற்கும் நாளிலிருந்து 2 ஆண்டுகள் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதவிக்காலம் முடந்தவுடன் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளின் பணியிடங்களின் அடிப்படையில் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
இதனையடுத்து மேற்கண்ட 7 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவியேற்றனர். தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 பேரையும் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 12 இடங்கள் காலியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.