கிம்போ செயலி வாயிலாக தொழில்நுட்ப துறையில் முதல் முறையாக கால் பதித்துள்ளது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்.
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஏற்கனவே சோப்பு-ஷாம்பூ முதல் நூடுல்ஸ் வரை பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
பிரபல குறுஞ்செய்தி செயலியான "வாட்சப்பை அழிப்பதற்காக" தொடங்கப்படுவதாக கூறப்பட்ட யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்திய செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து அது ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பாபா ராம்தேவின் பதஞ்சலி ப்ராடெக்ஸ் நிறுவனம், கடந்த வியாழக்கிழமை தற்போது சந்தையில் உள்ள குறுஞ்செய்தி செயலிகளுக்கு போட்டியாக 'கிம்போ' என்னும் செயலியை மேக் இன் இண்டியா"உள்நாட்டிலேயே" தயாரிக்கப்பட்டதென்று கூறி வெளியிட்டது.
ஆனால், அந்த செயலி வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே, பாதுகாப்பானது அல்ல என்றும், அச்செயலியை பயன்படுத்துபவர்களின் தகவல்களை எளிதாக ஹேக் செய்ய முடியும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இலவச செயலியால் திருடப்படும் அந்தரங்க தகவல்கள். இதுகுறித்து ஊடகத்திடம் பேசிய பதஞ்சலி நிறுவனத்தார், அந்த செயலியில் எந்த பிரச்சனையும் இல்லையென்றும், பொதுமக்களின் ஆர்வத்தை அறிவதற்காக ஒருநாள் மட்டும்தான் செயலியை வெளியிட்டதாகவும் கூறியுள்ளது.
"உலக தொழில்நுட்ப அரங்கில் இந்தியாவும் முதன்மையான இடத்தை வகிக்க முடியுமென்பதை கிம்போ செயலி நிரூபிக்கும்" என்று பதஞ்சலி ப்ராடெக்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் டிஜாரவாலா கூறியுள்ளார்.
"பொதுமக்களின் எதிர்வினையை தெரிந்துகொள்வதற்காகத்தான் கிம்போ செயலியை ஒருநாள் மட்டும் வெளியிட்டோம். அதற்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கிம்போ செயலியை விரைவில் முறையாக வெளியிடுவதற்கு முடிவுசெய்துள்ளோம், அப்போது செயலியின் பாதுகாப்பு சார்ந்த கேள்விகளுக்கு விடையளிக்க விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.
இதுகுறித்து பேசிய தொழில்நுட்ப எழுத்தாளர் பிரசான்டோ ராய்,"போலோ மெசஞ்சர் என்னும் செயலியை மையாக கொண்டு அவசரகதியில் உருவாக்கப்பட்டதுதான் கிம்போ செயலி" என்று கூறினார்.
"பயனர் மற்றும் செயலி குறித்த தரவுகள் எளிதில் படிக்கப்படக்கூடிய வகையில் சேமிக்கப்பட்டுள்ளதே பெரும் கவலையை எழுப்புகிறது. மேலும், பயனரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக இந்த செயலியிலிருந்து அனுப்பப்படும் குறுஞ்செய்தியை ஒரு ஹேக்கரால் எளிதாக கைப்பற்ற முடியும் என்பதுடன் மற்ற பயனர்களுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளையும் படிக்க முடியும்" என்று அவர் கூறினார்.
"அமெரிக்காவிலுள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள 'போலோ மெசஞ்சர்' என்னும் செயலியை பிரதியாக்கம் செய்து வேறொரு பெயரில் இந்த செயலி வெளியிடப்பட்டுள்ளது" என்று போலிச் செய்திகளை கண்டறியும் ஆல்ட் நியூஸ் என்னும் இணையதளம் கூறியுள்ளது.
"இந்த செயலி குறித்து தெரியவந்துள்ள விடயங்களை பார்க்கும்போது, ஏற்கனவே உள்ள ஒரு செயலியை போன்று மறு உருவாக்கம் செய்து, அதை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிம்போ செயலி என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை கண்டு பதறிய பதஞ்சலி நிறுவனம், "பதஞ்சலி நிறுவனத்தில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்களால் எங்களது நிறுவனத்திலேயே இந்த செயலி உருவாக்கப்பட்டது. கிம்போ செயலி முறையாக வெளியிடப்படும்போது அவர்களின் முயற்சி குறித்து நீங்கள் அறிவீர்கள்" என அதன் செய்தித்தொடர்பாளர் டிஜாரவாலா கூறினார்.
இந்தியாவின் இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை இந்த மாதத்தின் இறுதிக்குள் 50 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வாட்சப் குறுஞ்செய்தி செயலியின் மிகப்பெரிய சந்தையாகவும் இந்தியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.