ஆதார் எண்ணை வைத்து தனிநபரின் ரகசிய தகவல்களை திருட முடியும் என்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.
ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக மத்தியஅரசு கூறிவந்தாலும் ஆதார் பாதுகாப்பு குறைபாடு கொண்டது தான் என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டிவருகின்றனர்.
இதனை பொய்யாக்கும் வகையில் மத்திய அரசின் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய தலைவர் ஆர்.எஸ். சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியுட்டுள்ளார். தனது ஆதார் எண்ணை பகிரங்கமாக வெளியிட்ட சர்மா இதன் மூலம் தன் தனிப்பட்ட தகவல்களில் ஏதாவது ஒன்றை கண்டறியமுடியுமா என்று சவால் விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய ஷர்மாவின் சவாலை பிரான்ஸ்-ஐ சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் எலியட் ஆண்டர்சன் உள்பட பலர் ஏற்று பதிலளித்தனர்.
குறிப்பாக சர்மாவின் PAN எனப்படும் நிரந்தர வருமான கணக்கு எண், மின்னஞ்சல் முகவரி, ஆதாரில் குறிப்பிடப்படாத மற்றொரு செல்போன் எண், அவரது செல்போனின் வாட்ஸ்அப் சுயவிவர படமாக வைத்துள்ள புகைப்படம் ஆகிய தகவல்களை ஆண்டர்சன் வெளியிட்டுள்ளார்.
இதே போல சர்மா பயன்படுத்தும் செல்போன் ஐபோன் வகையை சார்ந்தது என்பதை மற்றொருவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சர்மா தனது ரகசிய தகவல்கள் திருடப்பட்டது குறித்து விசாரணை நடத்தும்படி மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், ஷர்மா குறித்தான தகவல்கள் ஆதார் மூலம் பெறப்பட்டது என்பது பொய் என மறுப்பு தெரிவித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ஆதார் ஆணையம், "ஷர்மாவின் தகவல்கள் ஆதார் தரவுகளில் இருந்து சேகரிக்கப்படவில்லை. ஷர்மா சமூகத்தில் பிரபலமானவர் என்பதால் அவருடைய முகவரி, பிறந்த தினம், செல்லிடப் பேசி எண், இமெயில் உள்ளிட்ட தகவல்கள் பொது தளங்களிலேயே உள்ளது. அதில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் தான் அது.
இதுபோன்ற தவறான செய்திகளால் மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. ஆதார் தரவுதளம் பாதுகாப்பாக உள்ளது. விளம்பரங்களுக்காக ஆதார் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
இது வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்துக்கும், தனிப்பட்ட தகவல் பாதுகாப்புக்கும் இடையிலான சவாலாகும். இந்த சவால், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி பரிந்துரைக்கும் பரிந்துரைகள் மூலம் சரிசெய்யப்படும்" என்று குறிப்பிட்டிருந்தது.
ஆனால் ஐபோன் வகை மற்றும் வாட்ஸ்அப் சுயவிவர படம் இதெல்லாம் சுட்டி காட்டி மத்திய அரசின் உயர் பொறுப்பில் உள்ள சர்மாவின் தகவல்களையே எளிதாக திருடப்பட்டிருப்பதின் மூலம் ஆதார் பாதுகாப்பற்றது என்ற குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என ஐடி நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
தொடர்பு செய்திகள் : இந்திய அரசு நிறுவனம் டிராய்யுடன் மோதும் ஆப்பிள்