சரக்கு -சேவை வரி விதிப்பால் (ஜி.எஸ்.டி), தமிழகத்தில் 3 சதவீதம் மட்டுமே வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக வணிகவரி துறை ஆணையர் டி.வி.சோமநாதன் தெரிவித்தார்.
சென்னை தொழில் மற்றும் வர்த்தக சபை சார்பில், ஜி.எஸ்.டி.யின் முதல் ஆண்டு பயணம் குறித்த கருத்தரங்கம், சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய கலால் வரி மற்றும் ஜி.எஸ்.டி. ஆணையர் சி.பி.ராவ் பேசியது:
ஜி.எஸ்.டி. தொடர்பாக பொதுமக்களும், வர்த்தகர்களும் அறிந்து கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஜி.எஸ்.டி. ஆணையரகம் சார்பில், 260 ஜி.எஸ்.டி. சேவை மையங்கள் வழியாக, 200 -க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
800 -க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி. தொடர்பாக 34,000 சந்தேகங்களுக்கு இப்போது வரை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், ஜி.எஸ்.டி. தொடர்பாக 62,000 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய ஜி.எஸ்.டி., வரம்பில் 2.85 லட்சம் வணிகர்களும், மாநில ஜி.எஸ்.டி.,யில் 10 லட்சம் வணிகர்களும் பதிவு செய்துள்ளனர்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பின்னர், குறைந்த வரி செலுத்தும் வணிகர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. செப்டம்பருக்கு பின்னர், ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய நடைமுறை, செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
தமிழ்நாடு வணிகவரி துறை ஆணையர் டி.வி.சோமநாதன் பேசியது:
கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு ஜி.எஸ்.டி. வேகமான வளர்ச்சியில் இருக்கிறது. ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு பின், தமிழக வருவாய் வளர்ச்சியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஜி.எஸ்.டி.,யால் தமிழகத்தில் மூன்று சதவீதம் மட்டுமே வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்காக, மத்திய அரசிடமிருந்து 3 சதவீதம் இழப்பீட்டை மட்டுமே தமிழகம் பெறுகிறது. நாட்டிலேயே, ஜி.எஸ்.டி.யால் குறைந்த அளவு இழப்பீடு பெறும் மாநிலங்களில், தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு முன்பு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை இருந்தது. தற்போது, முழுமையாக ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரேவிதமான நடைமுறைகள் இருப்பதால், இதுதொடர்பான பிரச்னைகளை தீர்க்க, மத்திய அரசையே அணுக வேண்டியுள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சரக்குகளுக்கான ரசீதுகள் உண்மையானதா என்பதைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், போலியான ரசீதுகளுக்கு உள்ளீட்டு வரி சலுகை வழங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், சென்னை தொழில் மற்றும் வர்த்தக சபையின் ஜி.எஸ்.டி. குழுத் தலைவர் வைத்தீஸ்வரன், சபையின் பொதுச் செயலாளர் சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்பு செய்திகள் : பினாமி சொத்துக்கள், கருப்பு பணம் துப்பு கொடுத்தால் பரிசு