வயது மூப்பு காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்த கருணாநிதிக்கு, சிறுநீரக தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து, வீட்டிலேயே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். நேற்று மாலையில் கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக அந்த கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் கருணாநிதிக்கு திடீரென உடல்நலம் குன்றியதால் அவரது தனி மருத்துவர் கோபால், கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார். அவரை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் இருந்து மருந்துகள் கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அதன் பின்னர், ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கோபாலபுரம் இல்லம் வந்தனர். தகவல் அறிந்த திமுக தொண்டர்கள் கோபாலபுரம் இல்லம் முன்பு குவிந்தனர்.
பின்னர் கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதைடுத்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் கருணாநிதி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலத்தப்பட்டது. இந்த நிலையில், ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு வந்தது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், ஸ்டாலின், அழகிரி, துரைமுருகன், கனிமொழி, ராசாத்தியம்மாள், ஆ.ராசா உள்ளிட்டோர் திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து மருத்துவமனைக்குள் சென்றனர்.
20 நிமிட சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல் நிலை சீரானதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா செய்தியாளர்களிடம் கூறினார். திமுக தலைவர் நலமுடன் உள்ளதால், தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என ஆ.ராசா கேட்டுக்கொண்டார்.
பின்னர் இது சம்பந்தமாக மருத்துவ அறிக்கையும் வெளியானதன் பின்னர் அங்கு குழுமி இருந்த தொண்டர்கள கலைந்து சென்றனர்.
தொடர்பு செய்திகள் : திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மோடி ராகுல் விசாரிப்பு