கோவை, பீளமேட்டில் உள்ள தனியார் மகளிர் தங்கும் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த மகளிர் விடுதியின் உரிமையாளர் ஜெகநாதன் நெல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோவை, பீளமேடு, ஜீவா வீதியில், கணபதி மாநகரைச் சேர்ந்த ஜெகநாதன் (48) மகளிர் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். விடுதியில் 42 பெண்கள் தங்கி உள்ளனர். கணவரை பிரிந்து வாழும் பீளமேடு பகுதியைச் சேர்ந்த புனிதா (32) காப்பாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்த விடுதியில் உள்ள மாணவிகள் 5 பேரிடம் ஜெகநாதன் தவறாக நடக்க முயன்றதாகவும், அதற்கு புனிதா உறுதுணையாக இருந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, விடுதியில் தங்கியிருந்தவர்களின் பெற்றோர் விடுதியை முற்றுகையிட்டனர்.
இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (45) பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், ஜெகநாதன், புனிதா இருவரும் செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இருவரையும் மூன்று தனிப் படையினர் தேடி வருகின்றனர்.
இதனிடையே சம்பந்தப்பட்ட விடுதியில் செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் மாவட்ட சமூக நலத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிமையாளர், காப்பாளர் குறித்த விவரங்களைச் சேகரித்துள்ளனர்.
எனினும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதால் சேகரித்த விவரங்களை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்ப உள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த விடுதி உரிமையாளர் ஜெகநாதன், திருநெல்வேலி, ஆலங்குளம் அருகே உள்ள கிணற்றில் இருந்து ஜெகநாதன் உடலை போலீஸார் மீட்டனர்.
ஜெகநாதனின் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்பு செய்திகள் : தமிழகத்தில் தொடரும் பயங்கரம்: விழுப்புரம், ராமநாதபுரத்தில் 2 சிறுமிகள் பலாத்காரம்