மத்திய அரசு சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ள பதிலில் "சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லை. அதேநேரத்தில், மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகமானது, தனது கொள்கைகள், திட்டங்கள் குறித்து முகநூல், சுட்டுரை, இன்ஸ்ட்ராகிராம், யு-டியூப் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்த சமூக ஊடக மையத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது"என்றார்.
ரகசியம் காத்தல் தொடர்பான தனிநபரின் உரிமையை பறிக்கும் திட்டமும் அரசுக்கு கிடையாது என்று அந்தப் பதிலில் ராஜ்யவர்த்தன் ரத்தோர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம், மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் பி.இ.சி.ஐ.எல். நிறுவனத்தின் மூலம், சமூக ஊடக மையத் திட்டத்துக்கான தொழில்நுட்பத்தை பெறுவது தொடர்பாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கருத்து கூறுகையில், நாட்டு மக்களின் வாட்ஸ்-அப் செய்திகளை கண்காணிப்பதற்காக சமூக ஊடக மையத்தை மத்திய அரசு ஏற்படுத்துகிறதா?' என்று கேள்வியெழுப்பியிருந்தனர்.
மேலும், இந்நடவடிக்கையானது, கண்காணிப்பு அரசு என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
தொடர்பு செய்திகள் : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் ராகுல் கண்டனம்