விசு மீது காவல்துறையில் பணமோசடி புகார் அளித்த பாக்யராஜ் இயக்குநர் விசு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் பணத்தை அபகரித்துவிட்டதாக, இயக்குநர் பாக்யராஜ் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

Special Correspondent

திரைப்படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுபவர்களுக்கான சங்கமாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் தற்போதைய தலைவராக இயக்குநர் பாக்யராஜ் உள்ளார்.

இந்நிலையில் இன்று இயக்குநர் பாக்யராஜ் தலைமையில் எழுத்தாளர் சங்கத்தினர், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனிடம், இயக்குநர் விசு மற்றும் பிறைசூடன் ஆகியோர் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த பாக்யராஜ், “தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், சமீபமாக நாங்கள் அனைவரும் பொறுப்புக்கு வந்திருக்கிறோம். இதற்கு முன்பாக நலிந்த எழுத்தாளர்களுக்கு கல்வித்தொகை, மருத்துவ உதவி உள்ளிட்டவை செய்ததாக சொல்லப்பட்டது. நாங்கள் பொறுப்புக்கு வந்தவுடன், அந்த அறக்கட்டளை நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ள அனைவரையுமே அழைத்தோம்.

இதற்கு விசு மற்றும் பிறைசூடன் போன்ற நிர்வாகிகள் வர மறுத்துவிட்டனர். மேலும் சங்கத்தின் பணம் அனைத்தும் அறக்கட்டளை பெயரில் இருக்கிறது என்று பிறைசூடனிடம் தெரிவித்த போது, சங்கம் வேறு, அறக்கட்டளை வேறு. இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்கிறார்.

இதனால் சங்கத்தின் முன்னாள் தலைவர் விசு, செயலாளர் பிறைசூடன், மதுமிதா உள்ளிட்டோர் பொதுக்குழுவின் ஒப்புதல் இன்றி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி சங்கத்தின் பணம் 37 லட்சம் ரூபாயை மோசடியாக அறக்கட்டளைக்கு மாற்றியுள்ளனர். இதற்கு வேறுவழியில்லாத காரணத்தால், அவர்கள் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

விசு தற்போது பாஜக கட்சியில் உள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

தொடர்பு செய்திகள் : நடிகை ஸ்ரீரெட்டி பதிலால் நடிகர் சங்கம் அதிர்ச்சி