ஆப்பிள் மொபைல் போன் நிறுவனத்திற்கு இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) விதித்துள்ள புதிய விதிமுறைகளால் இந்திய நாட்டில் அதன் சேவை முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆப்பிள் மொபைல் போன் நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டு தனது முதல் தலைமுறை ஐபோன் சேவையை சந்தையில் அறிமுகப்படுத்தியது.
தொடர்ந்து 11 தலைமுறை ஐபோன்களை அந்நிறுவனம் வெளியிட்டது. இவை அனைத்தும் அவற்றிற்கென தனித்துவமிக்க இயங்கு தளங்களை கொண்டு செயல்படும். அவற்றை ஐ.ஓ.எஸ். என்ற பெயரில் ஆப்பிள் நிறுவனமே உருவாக்குகிறது. அதனுடன் மொபைல் ஆப்களையும் அந்நிறுவனம் தனக்கென தனித்துவமுடன் தயாரித்து வைத்துள்ளது. இவ்வகை போன்களுக்காக 20 லட்சத்திற்கும் கூடுதலான ஆப்கள் அந்நிறுவனத்திடம் உள்ளன.
இந்த நிலையில், இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) மொபைல் போன் பயன்பாட்டாளர்களின் வசதிக்காக என சில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையிலான அப்ளிகேசன்களை (ஆப்) பயன்படுத்த வழிவகை செய்துள்ளது.
இதற்காக கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு டெலிமார்கெட்டர்கள் எனப்படும் வர்த்தக நோக்கோடு செயல்படும் நிறுவனங்கள் கட்டுப்படும்.
இதேபோன்று ஆண்டிராய்டு ஆப்பும் பயன்பாட்டாளர்களின் வசதிக்காக தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் அவற்றை பற்றி தகவல் தெரிவிக்கும் சேவையை வழங்குகிறது.
இதுபோன்ற ஆப்புகளை பயன்படுத்தும் வகையில் ஆப்பிள் நிறுவனமும் வழிசெய்ய வேண்டும் என டிராய் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், ஆப்பிள் நிறுவனம் 3வது பார்ட்டியின் (வேறு நிறுவனம்) ஆப்பை பயன்படுத்த அனுமதிப்பது இல்லை.
இது டிராய் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 10 இயங்கு தளத்தில் கால்கிட் எனப்படும் ஆப்பும், ஐ.ஓ.எஸ். 11 இயங்கு தளத்தில் எஸ்.எம்.எஸ்.களை தரம்பிரித்து ஏற்கும் வகையிலான எஸ்.எம்.எஸ். பில்டரிங் ஆப்பும் பயன்படுத்த வசதி உள்ளது.
இது மிக கட்டுப்படுத்தப்பட்ட வழிகளிலேயே செயல்பட அந்நிறுவனம் அனுமதிக்கிறது. இந்த நிலையில் மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் ஆகியவற்றிற்காக ஐ.ஓ.எஸ். 12 இயங்கு தளம் சந்தைக்கு வரவுள்ளது. இது, வெளிநிறுவனங்களின் ஆப்புகள் தேவையின்றி தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் தனித்துவமுடன் உருவாக்கப்படுகிறது. இதனால் 3வது பார்ட்டியின் தேவை தவிர்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையானது டிராயின் தேவையை நிறைவேற்றும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் இதனை எற்க மறுத்த டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் நாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனையை பாதிக்கும் வகையில் உள்ளது.
டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள 6(2)(இ) மற்றும் 23(2)(டி) ஆகிய புதிய விதிகளின்படி, டிராய் அமைப்பு உருவாக்கிய ஒரு ஆப் அல்லது டிராய் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆப் ஆகியவற்றை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கின்றது.
ஆனால் இந்த ஆப்கள் பயன்பாட்டாளர்களின் ரகசிய தன்மையை பாதிக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளையில் தனது ஆப்கள் இல்லாமல் பயன்படுத்தப்படும் சாதனங்கள் அங்கீகாரம் இழக்கும் என டிராய் நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதனால் டிராய் அமைப்பின் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன் சேவையை பாதிக்கும் என்பதுடன் இந்தியாவில் விற்பனையையும் பெருமளவில் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்பு செய்திகள் : செல்போனில் இணையத்தை பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை அதிரடியக உயர்வு : ஆய்வில் தகவல்