மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது.

Special Correspondent

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 126 வாக்குகளும், எதிராக 325 வாக்குகளும் பதிவாகின.

ஒரு வேளை நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றிருந்தால், ஆளும் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை. இன்னும் ஒரு ஆண்டு காலத்தில் சந்திக்க வேண்டிய தேர்தலை உடனடியாக சந்திக்கும். அவ்வளவே. ஆனால் அப்படி நடக்கவில்லை. மத்திய அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி கிடைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

மத்திய அரசும், மக்களவையில் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இருக்கிறது என்பதை நன்கு அறிந்தே இருந்தது. அதனால்தான் மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதாக சாபாநாயகர் அறிவித்து இரண்டு நாட்களில் விவாதம் மற்றும் வாக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் பாஜகவும், பாஜக தலைவர்களும் சொல்வது போல எதிர்க்கட்சிகளுக்கு எந்த தோல்வியும் இல்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து.

ஏன் என்றால், நேற்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது குறிப்பிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பேச்சுக்கள் அவ்வாறாக அமைந்திருந்தன.

அதாவது, இந்தியாவின் எந்த மூலையில் வேண்டுமானாலும் பிரதமர் மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் ராகுல் காந்தியால் விமரிசனங்களை முன் வைக்க முடியும். ஆனால் அது ஒரு 3 பத்தி அல்லது 4 பத்தி செய்தி அவ்வளவே.

ஆனால், இன்னும் ஒரு ஆண்டு காலத்துக்குள் மக்களவைத் தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் ஒரு விவாதத்தை நடத்தி அதில் எதிர்க்கட்சிகள் தங்களது கடுமையான, வலிமையான குற்றச்சாட்டுகளை எடுத்து வைக்க ஒரு நல் வாய்ப்பாகவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அமைந்திருந்தது.

அதிலும், மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தின் போது ராகுல் பேசிய பேச்சு நிச்சயம் அவரது அரசியல் பேச்சுக்களிலேயே ஒரு உரைக்கல்லாக அமைந்திருந்தது.

அப்போது, 4 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மோடி தேர்தலில் வாக்குறுதியாக சொன்னதும், அவர் செய்ததும் என அனைத்தையும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தேர்தலில் போது நான் பிரதமரில்லை, பிரதம சேவகன் என்றார் மோடி. பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டனர்.

Special Correspondent

பிரதமரின் பார்வையில் ஒருவித பதட்டம் தெரிகிறது, என்னால் அதை பார்க்கவும் முடிகிறது, உணரவும் முடிகிறது. என் கண்ணைப் பார்த்து பிரதமர் பேச வேண்டும். அவர் அதைத் தவிர்க்கிறார். அவர் உண்மையாக இல்லை என்பது இதில் இருந்தே புரிகிறது என்றார்.

பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பெட்ரோல், டீசல் விலை, சிறுபான்மையினர், தலித்துகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ராகுல் காந்தியின் இந்த ஆக்ரோஷ பேச்சு ட்விட்டரில் உலக அளவிலான ட்ரெண்டிங்கில் வந்தது.

முக்கியமாக ரஃபேல் தொடர்பான ஒப்பந்தங்கள் அனைத்தும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு பதிலாக, ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கு வழங்கப்பட்டது ஏன் என்ற கேள்வி..

பிரதமருக்கும், நமது நாட்டில் உள்ள சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

பிரதமர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவும், தனது கட்சியை வளர்த்துக் கொள்ளவும் யாரிடம் இருந்தெல்லாம் நிதி பெறுகிறார் என்பதும் நாட்டு மக்களுக்குத் தெரியும்.

ரஃபேல் ஒப்பந்தத்தால் பிரதமருக்கு வேண்டிய தொழிலதிபர் ஒருவர் ரூ.45,000 கோடி ஆதாயம் அடைந்துள்ளார்.

பிரதமர் மோடி எனது கண்களை நேரடியாக சந்திக்க முடியவில்லை. அவர் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறார். ஊழலைத் தடுக்கும் பாதுகாவலராக மோடி செயல்படவில்லை. அதனை ஒருங்கிணைப்பவராகவே உள்ளார்.

தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சத்தை செலுத்துவதாக பிரதமர் மோடி தேர்தலின்போது வாக்குறுதியளித்தார். இதுதான் அவர்களது போலி அரசியல் தந்திரத்தில் முதன்மையானது என்று பேசிய ராகுல் யாரும் எதிரபாராவிதமாக நேராக மோடியின் இருக்கைக்கு சென்று அவரை அணைத்த போது மோடி என்ன செயவது என்று புரியாமல் திகைத்தை இந்தியாவே உற்று நோக்கி உள் வாங்கியது.

தொடர்பு செய்திகள் : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் ராகுல் கண்டனம்