இந்தியாவின் முதல் புல்லட் ரயில் குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் மகாராஷ்டிராவின் மும்பைக்கும் இடையே அமைக்கப்படுவதாகக் கூறப்பட்டு, புல்லட் ரயில் அமைப்பதற்கான வேலைகளெல்லாம் முடிந்து 2022ல் செயல்பாட்டிற்கு வரும் எனச் சொல்லப்பட்டது.

Special Correspondent

508 கிமீ தூரத்துக்குப் போடப்படும் இந்த புல்லட் ரயில் வரவால் 10 மணி நேரப் பயணம் மூன்று மணி நேரமாகக் குறையும் என்கின்றனர்.

ஆனால் இத்திட்டத்திற்காக அளித்துவந்த நிதியை மக்களின் போராட்டத்தால் ஜப்பான் தற்போது நிறுத்தியதால் அது நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 1.10 லட்சம் கோடி. தேசிய அதிவேக ரயில் கழகம் லிமிடெட் (National High-Speed Rail Corporation Limited ) இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. திட்டத்திற்கான மொத்த தொகையில் 88,000 கோடி ரூபாயை ஜப்பான் தருகிறது. மீதமுள்ள 22,000 கோடி ரூபாய் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளால் தரப்படும்.

ஜப்பான் கொடுக்கக் கூடிய 88,000 கோடி ரூபாயும் குஜராத், மகாராஷ்டிரா மாநில அரசுகள் கொடுக்கும் நிதியும் தவணை முறையில்தான் அளிக்கப்படும். ஜப்பானின் சார்பில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்தான் (Japan International Cooperation Agency (JICA)) அந்த நிதியைத் தேசிய அதிவேக ரயில் கழகத்துரயில் கழகத்துக்கு ஒதுக்குகிறது.

அந்த 88,000 கோடி ரூபாயைக் கூட 15 ஆண்டுகளுக்குப் பிறகு 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தினால் போதுமானதாம். அதுவும் 0.1 சதவீத வட்டி விகிதத்துடன். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இத்திட்டத்தின் தொடக்க விழாவுக்காக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே (Shinzo Abe) இந்தியா வந்தபோது முதல் தவணையாக 125 கோடி வழங்கப்பட்டது. தொடர்ந்து தவணையாக திட்டத்திற்கான நிதி வந்த நிலையில் சமீபத்திய நிதி வரவில்லை.

Special Correspondent

JICA நிறுவனம் நிதியை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தொடர்ச்சியான மக்களின் போராட்டத்தினால் திட்டத்தைச் செயல்படுத்த முடியாததே இதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. அதுதவிர்த்து இந்தத் திட்டத்தில் பல்வேறு தடைகளும் இருக்கின்றன.

மக்கள் தொடர்ச்சியாகப் போராடிய பின்னர்தான் இதற்கான இழப்பீடுகள் குறித்து அரசு பேச ஆரம்பித்திருக்கிறது. இத்திட்டத்துக்காக குஜராத்தில் 350 ஹெக்டர் நிலமும் மகாராஷ்டிராவில் 1100 ஹெக்டேர் நிலமும் மொத்தமாக 1400 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன.

இவற்றில் பெரும்பான்மையானவை விவசாய நிலங்கள். அதனாலாயே இதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. குஜராத்தில் 196 கிராமங்களும் மகாராஷ்டிராவில் 104 கிராமங்களும் இதில் பாதிக்கப்படுகின்றன.

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் மட்டும் 2500 குடும்பங்கள் தங்கள் வாழ்விடங்களை இழக்க நேரிடும். இதுவரை இதுகுறித்த எந்த அறிவிப்பும் முறையாக அவர்களைச் சென்றடையவில்லை. தமிழ்நாட்டில் சென்னை சேலம் எட்டு வழி சாலை போல அங்கும் போராட்டம் நடந்து வருகிறது.

குஜராத்தின் மற்றோரு மாவட்டமான வல்சாட் (Valsad) விவசாயிகள் தொடர்ந்து மூன்று நாள்களுக்கும் மேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

Special Correspondent

அதுமட்டுமல்லாமல் கடந்த ஜுன் 22 முதல் 23 வரை குஜராத்தில் பாதிக்கப்படக்கூடிய அனைத்துக் கிராமங்களுக்கும் பேரணி சென்று எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர் விவசாயிகள்.

இத்திட்டத்துக்கான மொத்த நிலத்தையும் கையகப்படுத்த நவம்பர் 2018 வரைதான் காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளனர். இதற்காக, நிலத்திற்கான இழப்பீட்டை 25% அதிகப்படுத்தித் தருவதாகவும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், இதுவரை திட்டத்துக்குத் தேவையான நிலத்தில் 0.9% வரை மட்டுமே கையகப்படுத்தியிருப்பதாக தேசிய அதிவேக ரயில் கழகம் லிமிடெட் (National High-Speed Rail Corporation Limited ) தெரிவித்துள்ளது. புல்லட் ரயில் திட்டத்திற்கான வேலைகள் குறைந்த அளவே நடந்துள்ளதால் நிதியை நிறுத்தியுள்ளது ஜப்பான்.

தொடர்பு செய்திகள் : அமெரிக்கா மற்றும் ஈரான் அரசுகளின் இருபக்க இடியில் இந்தியா