தமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்களில் இடைத்தரகர் இல்லாமல் வேலை நடப்பதில்லை, நேரடியாக செல்பவர்கள் அலைகழிக்கப்படுவதாகவும், இடைத்தரகர் மூலம் வேலை நடப்பதால் லைசென்ஸ், வாகன எப்சி, பதிவு செய்வதற்கு அரசு நிர்ணயித்ததை விட பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்தி லைசென்ஸ், எப்சி, மற்ற பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் பல காரணங்களால் நிராகரிக்கப்படுவதாகவும், இடைத்தரகர் மூலம் வரும் தகுதியற்ற நபர்களுக்கு பணிகள் முடித்து தரப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதற்கிடையில் இலகு ரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ‘எஸ் பெண்ட்’(8) போடும் நடைமுறை இருந்து வருகிறது.
தற்போது இந்த முறையை மாற்றி மின்னணு முறையில் ‘ஹெச் டிராக்’ முறை படிப்படியாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த மின்னணு முறையை தமிழகம் முழுவதும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான பணிகளுக்கு, ஹெச் டிராக் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: வாகன ஓட்டிகள் நேரடியாக வாகனத்தை ஓட்டிக்காட்டி உரிமம் பெறும் பழைய முறைக்கு பதிலாக தற்போது துல்லியமான மின்னணு முறையில் ‘ஹெச் டிராக்’ நடைமுறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கரூரில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் இந்த முறை கொண்டு வர அனைத்து பணிகளும் முடிந்துள்ளது. இதன்மூலம் தகுதியில்லாத நபர்கள் முறைகேடாக ஓட்டுனர் உரிமம் பெறுவது தடுக்கப்படும்.
முறைகேடாக யாரும் இனி ஓட்டுனர் உரிமம் பெற முடியாது. ஒருசில ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளும் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆர்டிஓ அலுவலகத்திலும் எத்தனை சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். ஹெச் டிராக் முறை அமல்படுத்துவது தொடர்பாக அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த பணிகள் நிறைவு பெற்று அரசிடமிருந்து நிதி கிடைத்த உடன் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்பு செய்திகள் : செல்போனில் இணையத்தை பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை அதிரடியக உயர்வு : ஆய்வில் தகவல்