தகவல் அறியும் உரிமை சட்டமான ஆர்டிஐ-யில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் முயற்சிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தலைமை தகவல் ஆணையர், இதர ஆணையர்கள் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் உள்ளிட்டோரின் ஊதியம் மற்றும் பணி தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும் ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் திட்டம் தொடர்பாக அனைத்து மாநிலங்களவை எம்.பி.க்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மக்களிடமிருந்து உண்மையை மறைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்படுவதாக கூறியுள்ளார்.
உண்மையை தெரிந்து கொள்ள அனைத்து இந்தியர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் மக்கள் அதிகாரத்தில் உள்ளவர்களை கேள்வி கேட்கக்கூடாது என மத்திய அரசு நினைப்பதாக சாடியுள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால், அந்த சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கமே பயனற்றதாகிவிடும் என குறிப்பிட்டுள்ளார். எனவே ஆர்டிஐ-யில் திருத்தம் செய்ய நடக்கும் முயற்சியை அனைத்து இந்தியர்களும் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தொடர்பு செய்திகள் : குற்றச்சாட்டுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்: ஜெயகுமார் பகிரங்க எச்சரிக்கை