ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்களை போக்கி உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பியவர்கள், புகாருக்கு உள்ளானவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், டாக்டர்கள் என அனைத்து தரப்பினரிடமும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்து வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறார்.
அவ்வகையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கடந்த ஜனவரி 12ம் தேதி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தது. விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து மரணம் அடையும் வரை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து விவரங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையின் ஆவணப் பிரிவு மேலாளர் கோவிந்தராஜன் செவ்வாயன்று ஆஜரானார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அப்பல்லோ ஆவணங்களில் குளறுபடி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2016, செப்டம்பர் 23 முதல் இறுதியாக டிசம்பர் 5 -ஆம் தேதி வரை ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று தெரிகிறது. அத்துடன் சில ஆவணங்கள் பின்னர் தனியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த தகவலானது சிகிச்சையின் உண்மைத் தன்மை குறித்து மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தொடர்பு செய்திகள் : எடப்பாடியின் பினாமி எஸ்.பி.கே : ஸ்டாலின் கடும் தாக்கு