காற்று மாசுபாடு காரணமாக நாடு முழுவதும் 60 ஆயிரம் பேர் வரை இறந்துள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் “பெட்கோக்”(நிலக்கரி) இறக்குமதி செய்யவும் பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதித்துள்ளதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மத்திய அரசின் அனுமதி என்பது, மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், எந்தவிதமான ஆய்வும் நடத்தாமல் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும், மத்திய அரசையும் கேள்விகளால் துளைத்தனர்.
நீதிபதிகள் கூறுகையில், ''டெல்லியில் உள்ள தொழிற்சாலைகளில் பெட்கோக் பயன்படுத்த அனுமதி கொடுப்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறீர்கள்.
எந்தவிதமான ஆய்வுகளும் நடத்தாமல், பெட்கோக் பயன்படுத்துவதால், சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை ஆராயாமல் எப்படி அனுமதி அளித்தீர்கள்.
ஆனால், காற்று மாசால், 60 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக நாளேடுகளில் செய்தி வெளியாகியுள்ளது. மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? காற்று மாசால், இத்தனை மக்களா உயிரிழப்பது?
நாளேடுகளில் வந்த செய்தி உண்மையா, பொய்யா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், நீங்கள் அளித்த அறிக்கையிலும் காற்று மாசால் மக்கள் உயிரிழப்பைச் சந்திக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளீர்கள்'' எனத் தெரிவித்தனர்.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஎன்எஸ் நட்கர்னி வாதிடுகையில், ''பெட்கோக் பயன்படுத்த மத்திய சுற்றுச்சூழல் ஆர்வமாக இருந்தது என்பது தவறான தகவல். பெட்கோக் பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளோம். அதற்குச் சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது'' என்று தெரிவித்தனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, ''எங்களுக்குத் தொழிற்சாலைகள் முக்கியமல்ல, மக்களின் நலன்தான் முக்கியம். இதைத் தெளிவாக உங்களிடம் தெரிவிக்கிறோம்'' எனக் கூறி வழக்கைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
தொடர்பு செய்திகள் : தென்மேற்கு பருவமழையும் சரியும் தமிழக மின்தேவையும்