தமிழக மின்வாரியத்தில் 2.89 கோடிக்கும் அதிகமாக மின் நுகர்வோர் உள்ளனர். இவர்களுக்கு தினசரி சப்ளை செய்ய, வழக்கமான நாட்களில் சராசரியாக 13,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும்.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதம் கோடை வெயில் சுட்டெரிக்கும். இந்த சமயத்தில் பொதுமக்கள், ஏசி, பிரிட்ஜ் மற்றும் பேன் அதிகம் பயன்படுத்துவதால் மின்தேவையும் அதிகரிக்கும். கடந்த ஏப்ரல், மே மாதம் கோடை வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்ததால் மின்தேவை உயர்ந்தது.
அதன்படி, கடந்த ஏப்ரலில் 13,500 மெகாவாட்டில் இருந்து 15,000 மெகாவாட் ஆக தேவை அதிகரித்தது. ஏப்.27ம் தேதி அதிகபட்சம் 15,440 மெகாவாட் ஆக தேவை அதிகரித்தது. இதுதான் மின்வாரிய வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட உச்சக்கட்ட மின் தேவை ஆகும்.
இதற்கிடையில், தென்மேற்கு பருவமழையால் கோவை, நீலகிரி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஜூன் 20ம் தேதி வரை பரவலாக மழை பெய்தது.
பிற மாவட்டங்களிலும் வெப்பச் சலனத்தால் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து மக்களிடம் மின் பயன்பாடும் குறைந்தது. பின்னர் பருவமழை வலுவிழந்ததால் ஜூன் இறுதியில் மழைப்பொழிவும் குறைந்தது.
மீண்டும் மக்கள் ஏசி, பேன், பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்களை அதிகளவில் பயன்படுத்தினர். இதனால் தேவை மீண்டும் 15,000 மெகாவாட்டை தாண்டியது.
இந்தநிலையில் மீண்டும் தற்போது பருவமழை வலுப்பெற்று கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மின்தேவை சரிந்துள்ளது.
குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, , நெல்லை ஆகிய மாவட்டங்களில் தினமும் பலத்த மழை பெய்கிறது. இதனால் 15,000 மெகாவாட்டில் இருந்து 13,500 மெகாவாட் ஆக மின்தேவை சரிந்துள்ளது. நேற்று முன்தினம் மின்தேவை 13,472 மெகாவாட் ஆக இருந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
தொடர்பு செய்திகள் : மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்கும் செய்தியால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி