அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைப் பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசுக்கு சத்துணவுப் பொருள்கள் விநியோகம் செய்யும் கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் பலகோடி மதிப்பிலான பணம் மற்றும் ஆவணங்கள் கைபற்றப்பட்டன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
சென்ற வாரம் ரெய்டு ஈரம் காயும் முன்னரே., அடுத்த ரெய்டு இன்று தொடங்கியது.
செய்யாத்துரையும் அவரது மகன் நாகராஜனும் எஸ்பிகே கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில், ஒப்பந்த அடிப்படையில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நெடுஞ்சாலைப் பணிகளை மலை என எடுத்து செய்துவருகிறார்கள்.
கல்குவாரி, இவர்கள் கட்டுமான நிறுவனம், நூற்பாலை போன்றவற்றையும் நடத்தி வருவது குறிப்பிடதக்கது.
மேலும் தமிழ்நாட்டில் சாலைப் பணிக்கான ரூ.3,000 கோடி ஒப்பந்தத்தை எஸ்.பி.கே பெற்றுள்ளது. ரூ. 200 கோடியில் மதுரை வட்டச்சாலை அமைத்து 18 ஆண்டுக்கு சுங்கவரி வசூலிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வண்டலூர் - வாலாஜாபாத் 6 வழிச்சாலை பணிக்கு ரூ.200 கோடி ஒப்பந்தம் எஸ்.பி.கே பெற்றுள்ளது. நெல்லை - செங்கோட்டை சாலை அகலப்படுத்தும் ரூ. 407 கோடி ஒப்பந்தம் எஸ்.பி.கே பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.
நெடுஞ்சாலைப்பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்திருந்தது. ஆதலால் எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் 30 வங்கிக் கணக்குகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைப் பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரை கல்குவாரியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
300-க்குட் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையில் எஸ்.பி.கே நிறுவனத்துக்கு சொந்தமான ஓட்டலில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.பி.கே நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் அண்ணாநகர், போயஸ்கார்டன் உள்பட எஸ்.பி.கே நிறுவனத்துக்கு சொந்தமான 5 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், ஒப்பந்ததாரர் செய்யாதுரை நிறுவனத்தில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளது. முதல்கட்டமாக ரூ. 80 கோடி எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. மூட்டை மூட்டையாக பணம் கிடைத்துள்ளதால் அதிகாரிகள் எண்ணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு எண்ணும் கருவி வரவழைக்கப்பட்டு பணத்தை அதிகாரிகள் எண்ணுகின்றனர். எஸ்.பி.கே நிறுவனத்தில் பதுக்கப்பட்ட பணத்தை பார்த்து அதிகாரிகள் வியப்படைந்துள்ளனர்.
இந்தச் சோதனை நெடுஞ்சாலை மற்றும் பொதுபணி துறையை எழு ஆண்டாக தன் வசம் வைத்து இருக்கும் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் குறிவைத்து நடத்தப்பட்டது என அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
தொடர்பு செய்திகள் : சத்துணவு திட்டத்தில் முறைகேடு தொடர்பாக ஐ.டி. ரெய்டு : தமிழக அமைச்சரின் தொடர்பு அம்பலம்