தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக பருவமழை கைகொடுக்கவில்லை. ஆனால் காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகுமலை மற்றும் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தவறாமல் பெய்து வருகிறது.
இந்த ஆண்டு கர்நாடகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. .
இந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளதால் இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தமிழக–கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்தடைகிறது. .
கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. .
கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காலையில் நீர்வரத்து 48,000 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 12–ந்தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 71.76 அடியாகவும், 13–ந்தேதி 75.36 அடியாகவும், நேற்று 82 அடியாகவும் இருந்தது. இன்று அணை நீர்மட்டம் 85 அடியை நெருங்கியுள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறது. .
கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நாளை திங்கட்கிழமை மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தால் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடிக்கும் மேல் உயர வாய்ப்புள்ளது. .
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட 1 லட்சம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததும் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இன்னும் ஒரு சில நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்பு செய்திகள் : காடுகளை ஆக்கிரமித்து ஈஷா மையம் கட்டிடம் தணிக்கைத் துறை பகீர்