சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றாத தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் அனுமதியின்றி, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ராட்சத விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னையை சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலைகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. எந்த அனுமதியும் பெறாமல் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதிகள், பலமுறை டிஜிட்டல் பேனர்களை அகற்ற உத்தரவிட்டும் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அதிகாரிகளுக்கு எண்ணமில்லையா?
பல உத்தரவுகள் காகித அளவிலேயே உள்ளன. அரசு நடவடிக்கை எடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தாலும், அதன்பின்னர் அந்த இடத்திற்கு சென்று பார்த்தாலும் மீண்டும் அதே நிலையில்தான் உள்ளது. நீதிமன்ற வளாகத்தை சுற்றியே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்றால் கூறுங்கள். எப்படி அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கண்டித்தனர்.
பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சுக்கு நீதிபதிகள் மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.
தொடர்பு செய்திகள் : சிலைகள் மாயமாவது அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு