மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 6ம் தேதி நடந்தது. தமிழகத்தில் இந்த தேர்வை 1,07,288 பேர் எழுதினர். தமிழில் மட்டும் 24 ஆயிரத்து 700 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாளில் 49 கேள்விகள் தமிழில் சரிவர மொழிபெயர்க்கப்படவில்லை.
மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிழையாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு 4 மதிப்பெண் என்ற வீதத்தில் மொத்தம் 196 மதிப்பெண் தமிழில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வழங்குமாறு தீர்ப்பு வழங்கியது. மேலும் 2 வாரத்தில் புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிடவும் சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டது.
நீட் தேர்வு முடிவுக்கு பிறகு தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சலிங் கடந்த 1ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை நடந்தது. இதில் 3501 மாணவ மாணவியர் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான சேர்க்கை உத்தரவை பெற்றுள்ளனர்.
.இதையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்தது.
இதற்கிடையில், மதுரை நீதிமன்ற உத்தரவினால், தரவரிசைப்பட்டியலை சிபிஎஸ்இ மாற்றினால் எல்லா மாநிலங்களிலும் அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கை மீண்டும் நடத்த வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும் 2 வாரத்தில் புதிய தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டால், தமிழில் தேர்வு எழுதிய பல மாணவர்களுக்கு கணிசமான அளவில் மருத்துவ சீட் கிடைப்பதற்கான சூழல் உருவானது.
இந்த நிலையில் மத்திய மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் வரும் 16,17,18 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட இருந்தது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இயக்குநரகம் தரப்பில் இருந்து நேற்று ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ”நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை அடுத்து அகில இந்திய அளவில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கு இரண்டாம் கட்டமாக நடக்கவிருக்கும் மருத்துவ கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதில் மறு உத்தரவு வரும் வரை இதே நிலை தொடரும். இதைத்தவிர தமிழகத்தில் வரும் 16ம் தேதி நடைபெற இருக்கும் தனியார் கல்லூரிகளின் கலந்தாய்வும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழக கூடுதல் மருத்துவ கல்வி இயக்குநர் செல்வராஜன் வெளியிட்ட அறிக்கையில் " உயர்நீதி மன்ற மதுரை கிளையில் நடந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரண்டாம் கட்டமாக 16, 17, 18ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த கவுன்சலிங் ரத்து செய்யப்படுகிறது. தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சலிங் வேறு தேதியில் நடத்தப்பட உள்ளது. அதற்கான நாள் மருத்துவக் கல்வி இயக்கக இணைய தளத்தில் வெளியிடப்படும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக எவ்வாறு மேல்முறையீடு செய்வது என்பது தொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம் அதன் மூத்த அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
நீட் தேர்வின் போது தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களில் தவறு நடந்திருப்பது தெளிவாக தெரியவந்துள்ளது. ஒரு வேளை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யும் பட்சத்தில் அதே தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்தால் அது மிகப்பெரிய பிரச்னையாக அமைந்து விடும்.
எனவே இந்த பிரச்னையை எவ்வாறு தீர்க்கலாம் என்ற கோணங்களில் தீவிர ஆலோசனைகளில் சிபிஎஸ்இ நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதைத்தவிர மருத்துவ கவுன்சலிங்கை நடத்தி வரும் சுகாதாரத்துறையிடம் மத்திய மனிதவளத்துறை அமைச்சகமும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்பு செய்திகள் : நீட் தேர்வில் நீதிமன்ற அதிரடி தீர்ப்பால் புதிய திருப்பம்