கோவை அருகே தனியார் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது மாடியிலிருந்து குதித்த மாணவி தலையில் அடிபட்டு உயிரிழந்த வழக்கில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Special Correspondent

கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகேயுள்ள நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் நல்லா கவுண்டர். இவரது மகள் லோகேஷ்வரி (19). இவர் தொண்டாமுத்தூரை அடுத்த நரசீபுரம் பகுதியில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார்.

கலைமகள் கல்லூரிக்கு அதிமுக பாரளுமன்ற துணை சபா நாயகர் தம்பிதுரை மனைவி பானுமதி தான் கல்லூரியின் தலைவர் என்பதும் குறிப்பிடதக்கது

இந்த நிலையில், கல்லூரியில் வியாழக்கிழமை பிற்பகலில் என்.எஸ்.எஸ். திட்டம் சார்பில் தேசிய பேரிடர் மேலாண்மைப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பயிற்சி அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான அலுவலர்கள் கலந்து கொண்டு 20 மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்தனர். அப்போது, பேரிடர் காலங்களில் உயிர் பிழைப்பது தொடர்பாக கல்லூரியின் 2ஆவது மாடியில் இருந்து குதித்து தப்பிப்பது குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது. இதற்காக கீழே சிலர் வலையை கையில் பிடித்தபடி காத்திருக்க மாணவர்கள் ஒவ்வொருவராக குதித்தனர்.

அப்போது, மாணவி லோகேஷ்வரி குதிக்கும்போது அவரது தலை எதிர்பாராதவிதமாக முதலாவது மாடியின் சாளரத்தின் மீது (சன் ஷேடு) மோதிவிட்டது. இதில் அவரது பின் மண்டை, கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் லோகேஷ்வரி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து ஆலாந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பயிற்சியாளர் ஆறுமுகம், கல்லூரி முதல்வர் எல்.மாலா ஆகியோரிடம் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், ஆலாந்துறை போலீஸார் பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்பு செய்திகள் : டெல்லியில் குழந்தைகளை சிறை வைத்த பள்ளிக்கு நேரில் சென்று முதல்வர் விசாரணை