டெல்லியில் கட்டணம் செலுத்தாத குழந்தைகளை சிறை வைத்த பள்ளிக்கு நேரில் சென்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
டெல்லியில் ஹாஸ் ஹஸி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகளை பள்ளி கீழ்தளத்தில் தனியாக ஓரிடத்தில் அடைத்து வைத்தனர்.
காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை குழந்தைகளை காற்றோட்டமின்றி பள்ளி நிர்வாகம் அடைத்து வைத்துள்ளனர். பள்ளி முடிந்ததும் இதுகுறித்த தகவல் குழந்தைகள் மூலம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகள் பள்ளியில் சிறை வைக்கப்பட்டிருந்த காட்சிகள் சமூக வளைத்தளங்களில் வெளியானது. இதுகுறித்து தகவலறிந்த மாநில பெண்கள் ஆணையம், இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி காவல்துறை மற்றும் கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பள்ளிக்கு நேரில் சென்று குழந்தைகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இதுகுறித்து டெல்லி அரசு மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தொடர்பு செய்திகள் : கட்டிடம் கூட இல்லாத ஆரம்பிக்கவேபடாத ஜியோ பல்கலைகழகம் உலகத் தர தகுதியா..