வரலாறு என்பது எப்போதும் விநோதமானதுதான். அதுவும் அரசியல் வரலாறு என்பது கூடுதல் விநோதத்தன்மை கொண்டது. யாரெல்லாம் ஒவ்வொரு காலத்திலும் தங்கள் நிலைப் பாடுகளை மாற்றிவந்திருக்கிறார்கள் என்பதை அவர்களே மறந்தாலும், வரலாறு சுட்டிக் காட்டிவிடும்.

Special Correspondent

‘கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மாநில சுயாட்சித் தத்துவத்துக்கு எதிராகச் செயல்படுகிறார்’ என்ற குற்றச்சாட்டைச் சட்டசபையில் தி.மு.க எழுப்பியபோது, அனுமதி மறுக்கப்பட்டது. “கடந்த காலங்களில் இதே சபையில், கவர்னரைப் பற்றிப் பேசப் பட்டிருக்கிறது. அவையெல்லாம் அவைக்குறிப்பில் இருக்கின்றன’’ என ஸ்டாலின் சொன்னபோது, சபாநாயகர் தனபால், “சட்டசபை விதி 92, உட்பிரிவு 7, கவர்னர் குறித்துப் பேச அனுமதிக்க வில்லை. 1995-ம் ஆண்டு விதி தளர்த்தப்பட்டது. ஆனால், 1999-ம் ஆண்டு, அப்படி விதியைத் தளர்த்தக் கூடாது என, புதிய விதி சேர்க்கப் பட்டது. அந்த விதியைத் தளர்த்த விரும்பவில்லை’’ எனச் சொல்லி, கவர்னரைப் பற்றிப் பேச அனுமதிக்கவில்லை. அந்த ‘1995’-ல் அப்படி என்னதான் நடந்தது தமிழக சட்டசபையில்?

ஆளுநரைப் பற்றிப் பேச அனுமதிக்கப்படாத இதே அவையில்தான், அவரைத் துவைத்துக் கிழித்துத் தொங்கப்போட்டார் ஜெயலலிதா. அப்போது கவர்னராக இருந்த சென்னா ரெட்டிக்கு எதிராக சட்டசபையிலேயே தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் ஜெயலலிதா. அவரின் வழித்தோன்றல்கள் இன்றைக்கு வழிமாறியிருக்கிறார்கள்.

‘மாநில முதலமைச்சரைக் கலந்தாலோசித்து, ஆளுநரை நியமிக்கும் முறையைச் சட்டபூர்வமாக்க, அரசியலமைப்புச் சட்டத்தின் 133-வது பிரிவைத் திருத்த வேண்டும். ஆளுநரைத் திரும்பப்பெற்று வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்’ என்ற வாசகங்களோடு அரசினர் தனித்தீர்மானம் ஒன்றை 1995 ஏப்ரல் 26 அன்று அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் கொண்டு வந்தார்.

“அரசியல் அமைப்பின் நெறிமுறைகளுக்கு மாறாக, ஆளுநராகப் பதவி வகிப்பவரின் செயல்கள் அமைந்துள்ளன. மக்களின் ஆதரவோடு அமைந்த அரசை நிலைகுலையச் செய்யும் நடவடிக்கைகளில் ஆளுநர் ஈடுபடுகிறார்’’ என விவாதத்தைத் தொடங்கி வைத்தார் நெடுஞ்செழியன். அடுத்து பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் துணைத்தலைவர் டேனியல்ராஜ், “இந்த இரண்டாண்டுக் காலத்தில் எத்தனை முறை ஆளுநரை முதல்வர் சந்தித்து சட்டம் ஒழுங்கு பற்றி விவாதித்திருக்கிறார்?’’ எனக் கேள்வி எழுப்பியதும், அதுவரை அமைதியாக விவாதத்தை கவனித்துக்கொண்டிருந்த ஜெயலலிதா எழுந்து, கர்ஜிக்க ஆரம்பித்தார்.

“ஆளுநர் சம்பந்தப்பட்ட சில கசப்பான உண்மைகளை வெளியிடுவது மரபல்ல என்பதற்காகவே பேசாமல் இருந்தேன். ஆனால், எதை நான் சொல்ல வேண்டாம் எனக் கருதினேனோ, அதைச் சொல்லும்படியான கட்டாயம் ஏற்பட்டுவிட்டது’’ என முன்னோட்டம் கொடுத்துவிட்டு, இந்தியாவே அதிரும்படியான ஒரு ‘குற்றச்சாட்டை’ முன்வைத்தார்.

“முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் எப்படி நடைபெற வேண்டும் என்பதற்குச் சில வரைமுறைகள் இருக்கின்றன. All any time an exchange between a Governor and a Chief Minister has to be conducted with decorum, decency and dignity. இவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, தகாத வார்த்தைகளால் ஆளுநர் என்னை ஏசினார்; அவமதித்தார்.

ஆளுநருக்கும் கவர்னருக்கும் இடையே ஒர்க்கிங் ரிலேஷன்ஷிப் நிலவ வேண்டுமென்றால், பேச்சில் கண்ணியம் வேண்டும். டீசென்சி நாகரிகம் இருக்க வேண்டும். பேசக்கூடாத வார்த்தைகளை இழிவான முறையில் ஒரு ஆளுநர் பயன்படுத்துகிறார் என்று சொன்னால் அவருடன் எப்படி சேர்ந்து பணியாற்ற முடியும். அதனால்தான் கவர்னரை சந்திக்கவில்லை’’ என்று பொரிந்துதள்ளினார் ஜெயலலிதா.

Special Correspondent

இப்படி ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்தபோது அவையில் 8-வது இருக்கையில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த அமைச்சர் கே.செங்கோட்டையன், 18-வது இருக்கையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த அமைச்சர் டி.ஜெயக்குமார், பின்வரிசையில் ஓரமாக உட்கார்ந்துகொண்டிருந்த உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்றைய சட்டசபையிலும் உறுப்பினர்களாக இடம்பெற்றிருக்கிறார்கள். அன்றைக்கு ஜெயலலிதா பேசிய பேச்சுக்கு மேஜையைத் தட்டிய இவர்கள்தான், இப்போது கவர்னரின் இமேஜைக் காப்பாற்றுவதில் கரிசனம் காட்டுகிறார்கள்.

சென்னா ரெட்டிக்கு எதிராக ஜெயலலிதா வாள் சுழற்றிய நேரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.செல்வராஜ் எம்.எல்.ஏ-வாக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் ‘ஜெயா காங்கிரஸ்’காரராகத்தான் இருந்த அவரும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத் திருவாய் மலர்ந்தார். “ராஜ்பவனை அரசியல் கட்சி அலுவலகமாக மாற்றிவிட்டார்கள். கவர்னர் என்கிற பதவிக்கே அலங்கோலமாகச் செயல்படுகின்ற சென்னா ரெட்டியை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை என்றால், மக்களே இதனை எதிர்த்துப் போராடுவதற்குத் தயாராகிவிட்டார்கள்’’ என்றார். இதே செல்வராஜ்தான் இப்போது அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளராக இருந்து கொண்டு, டி.வி. விவாதங்களில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பற்றிய கேள்விகளுக்குப் பம்முகிறார்.

மேலும் கவர்னர் குறித்து ஜெயலலிதா சொன்ன சில தடாலடியான கருத்துகள் இவை:

“தங்களுக்குச் சாதகமாகச் செயல்படாத அரசுகளை அச்சுறுத்த கவர்னர் பதவியை மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஒருவகையில் ஆளுநர் மாளிகைகள் அரசியல் குப்பைத் தொட்டிகளாக (Trash Bins of Politics) மாறிவிட்டன.’’

“நாடாளுமன்ற ஜனநாயக முறையில் ஆளுநர் ஒரு சூப்பர் சீஃப் மினிஸ்டராகச் செயலாற்ற முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசை நிர்வகிக்கும் பொறுப்பும் கடமையும் மாநில முதலமைச்சருக்குத்தான் உண்டு.’’

சென்னா ரெட்டியோடு ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக இந்தியாவில் யாரும் செய்யாத இன்னோர் அதிரடியையும் செய்து காட்டினார் ஜெயலலிதா. ‘பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரே இருப்பதற்கு வகை செய்யும் சட்ட மசோதா’வைச் சட்டசபையில் கொண்டு வந்து கிலி ஏற்படுத்தினார்.

23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய கதை இது. மேடைக்கு மேடை குட்டிக்கதை சொல்லும் எடப்பாடி பழனிசாமி இப்போது மறக்க விரும்பும் கதையும்கூட.

எழுதியவர் : எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

தொடர்பு செய்திகள் : ஜெயலலிதா கனவு திட்டத்தை அதிமுகவினர் நிறுத்தி வைத்தனர்