தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முட்டை, சத்து மாவு, பருப்பு உள்பட பல பொருட்களை கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற நிறுவனம் விநியோகம் செய்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த ஆண்டி பாளையத்தில் இதன் அலுவலகம் உள்ளது.

Special Correspondent

தமிழகம் மற்றும் கர்நாட காவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ள இந்த நிறுவனம் அவர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விநியோகம் செய்து வருகிறது.

இந்த நிலையில் கிறிஸ்டி நிறுவனம் போலியான பெயர்களில் நிறுவனங்களை உருவாக்கி அங்கிருந்து பொருட்களை வாங்கியதாக புகார்கள் எழுந்தன. அதோடு போலி கணக்கு தாக்கல் செய்து வரி ஏய்ப்பிலும் கருப்பு பணத்தை பதுக்கியதாகவும் வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தது.

கர்நாடகாவில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு கிறிஸ்டி நிறுவனம் சத்துமாவு பாக்கெட்களை விநியோகம் செய்தது. அது தரமற்று இருப்பதாகவும், கெட்டு போகமால் இருக்க துத்தநாகம் அதிக அளவில் கலக்கப்படுவதாகவும் புகார் எழுந்ததால் கிறிஸ்டி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கர்நாடக அரசுரத்து செய்தது.

இதையடுத்து கிறிஸ்டி நிறுவனத்திலும் அதன் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் நேற்று அதிகாலை முதல் ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தினர். கோவை,பெங்களூருவில் உள்ள கிறிஸ்டி நிறுவன அலுவலகங்கள், சென்னை திருவான்மியூரில் உள்ள அதன் உரிமையாளர் பி.எஸ். குமாரசாமியின் வீடு மற்றும் அலுவலகம், கோவையில் உள்ள நேச்சுரல் புட் புராடக்ட்ஸ், சுவர்ணபூமி நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், சத்துமாவு மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண் இயக்குநராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி சுதா தேவியின் நெற்குன்றம் வீடு, அலுவலகம் மற்றும் அதிகாரிகள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் இரண்டாது நாளாக தொடர் சோதனை நடத்தினர்.

Special Correspondent

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு சொந்தமான 89 ஏக்கர் நிலம் சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. அந்த நிலத்தை சிதம்பரத்தின் குடும்பத்தினர், அக்னி பில்டர்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.

அந்த நிறுவனம், 89 ஏக்கர் நிலத்தை உடனடியாக கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.46 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். ஏற்கனவே, சிதம்பரம் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது ஆவணங்கள் சிக்கின.

சிதம்பரம் குடும்பத்தினரிடம் இருந்து நிலம் வாங்கிய அக்னி பில்டர்ஸ்., கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமியின் நண்பர் ஜெயப்பிரகாஷ், சென்னை மயிலாப்பூரில் அக்னி எஸ்டேட்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.

இதனால் அவரது வீடு அலுவல கம் மற்றும் திருச்செங்கோடு மோர்பாளையத்தில் உள்ள குமாரசாமியில் மற்றொரு வீடு அவரது நண்பர்கள், உறவி னர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் வட்டூரில் உள்ள உரிமையாளர் குமாரசாமி வீடு, கூட்டப் பள்ளியில் உள்ள நிறுவனத்தின் ஆடிட்டர்கள் ராம கிருஷ்ணன், சங்கர் ஆகியோரது வீடு, தொண்டிக்கரடு, விட்டம் பாளையம் பகுதிகளில் உள்ள குமாரசாமியின் உறவினர்கள் வீடுகள், நாமக்கல் ராசிபுரம் சுற்று வட்டாரங்களில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான குடோன்கள், ராசிபுரத்தில் உள்ள ராசி நியுட்ரி புட்ஸ் நிறுவனம், நாமக்கல் மாவட்டம் காதப் பள்ளி, வேப்பநத்தம், கருப்பட்டி பாளையம் ஆகிய இடங்களில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தின் முட்டை குடோன்கள் என மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.

Special Correspondent

இதற்கிடையே கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி நிறுவன தலைவர் குமார சாமி தொழில் விசயமாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு சென்றிருந்தார். அவரிடம் அங்குள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரை சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்தனர். அவரிடம் சென்னையில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி வீட்டில் சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

குறிப்பாக சத்துணவு கூடங்களுக்கு முட்டை சப்ளை செய்யும் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து அரசு அதிகாரிகள் சிலரது வங்கி கணக்குகளுக்கு லட்சக் கணக்கில் பணம் பரிமாற்றம் செய்திருப்பதற்கான ஆதாரம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அந்த ஆதாரத்தை குமாரசாமியிடம் காண்பித்து விசாரணை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த விசாரணை இன்று காலையிலும் நீடித்தது.

மேலும் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை காட்டியும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

76 இடங்களில் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற வருமான வரித்துறையின் தொடர் சோதனையில், கணக்கில் வராத ₹5 கோடி பணம், அமெரிக்க டாலர்கள், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் சுதாதேவி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக ஆவணங்கள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த முறைகேட்டில் ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு இருப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்னளர்.

இதில், போலி நிறுவனங்களுக்கான ஆவணங்களும், அதற்காக யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய ஆவணங்களும் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Special Correspondent

இந்த சோதனையில் சத்துமாவு மற்றும் முட்டை கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட பல கோடி ரூபாய் சட்டத்திற்கு புறம்பாக வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான சில ஆவணங்கள் சிக்கியது. மேலும் சோதனை நடத்தப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அதாவது அதிகாலை 4 மணிக்கு சுதாதேவி, குமாரசாமியிடம் பேசியுள்ளார்.

கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்குகளில் இருந்து போலி நிறுவனங்களில் வங்கி கணக்குகளுக்கும், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் சுதாதேவியின் உறவினர்கள் மற்றும் அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகளின் வங்கி கணக்குகளுக்கும் பல கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறை வட்டாரம் தெரிவித்தது.

இந்தியாவில் சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு இரண்டாவது மிக பெரிய வருமான வரித்துறை சோதனை இது என வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனையில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு இந்த முறைகேட்டில் தமிழக அமைச்சர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த ஆவணங்களும் சிக்கின. இந்த ஆவணங்களை வைத்து அமைச்சரை வழக்கில் சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று வருமான வரித்துறை தகவல் கசிகிறது.

தொடர்பு செய்திகள் : ஜெயலலிதா கனவு திட்டத்தை அதிமுகவினர் நிறுத்தி வைத்தனர்