பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இப்போராட்டத்தில் தமிழகம் முழுவதும் திமுக உள்பட அதன் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள்தொண்டர்கள் சுமார் 3 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர்.
பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மறியல் போராட்டத்தில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் கொளத்தூர் எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை 9.45 மணியளவில் வந்தார். அங்கிருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் திரளான தொண்டர்களுடன் கைகளில் கொடிகளை ஏந்தியவாறு ஜவாஹர் நகர் பிரதான சாலை வழியாக நடந்து வந்தனர்.
மு.க.ஸ்டாலின் கைது: அகரம் - பெரவள்ளூர் சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை அருகில் சாலையில் அமர்ந்து 10 நிமிஷங்களுக்கு மேலாக அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.
இதனால், அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். காவல்துறை சார்பில் அனைவரையும் அழைத்துச் செல்வதற்கு போதுமான வாகனம் இல்லை. இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நடந்தே சென்றனர். திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
சென்னை, ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் உள்பட மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சைதாப்பேட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 780 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் சென்னை சூளை தபால் நிலையம் அருகில் 100-க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
வேலூரில் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தலைமையிலும், திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலும், விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையிலும், ஈரோட்டில் திமுக துணைப் பொதுச் செயலர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் தலைமையிலும், திருச்சியில் திமுக தெற்கு மாவட்டச் செயலர் கே.என்.நேரு தலைமையிலும் ஆயிரக்கணக்கானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
810 இடங்களில் மறியல்: தமிழகம் முழுவதும் 810 இடங்களில் திமுக, அதன் கூட்டணிக் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 1.40 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மட்டும் 63 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 15 சட்டப் பேரவை உறுப்பினர்கள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட மொத்தம் 12,464 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெண்கள் 2, 018 பேர் இடம்பெற்றிருந்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
எந்த இடத்திலும் அசம்பாவிதம் நிகழ்தாமல் திமுக மற்றும் எதிர்கட்சி நடத்திய கடும் பேருந்து உயர்வு போரட்டத்துக்கு பொதுமக்கள் கை அசைத்து அதரவு தந்தனர்...
“பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் அல்லது முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும்” என்றும், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கடந்தகால ஆட்சியே பேருந்து கட்டண உயர்வுக்குக் காரணம் என முதல்வரும் - துணை முதல்வரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்” என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.