தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து நிலைகளிலும் பேருந்து கட்டணம் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட்ட தொடர் நஷ்டம் காரணமாக கடந்த 2011ல் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் 6 வருடங்களுக்கு பின்னர் கடந்த ஜன.20 ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தி அமைக்கப்பட்டது. இதன் மூலம் பேருந்து கட்டணம் 50 சதவீத்ததில் இருந்து 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பேருந்துக் கட்டணத்தை திரும்பப் பெறக் கோரி திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போரட்டத்தில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக சிறை நிரப்பும் போராட்டம் செய்யும் என்று அறிவித்தது அதிமுக அரசின் வயிற்றில் புளியை கரைக்க இந்நிலையில், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைப்பதாக தமிழக அரசு இன்று காலை தடீரென அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, குறைக்கப்பட்ட பேருந்து கட்டணமானது, சாதாரண பேருந்துகளில் கட்டணம் 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும், விரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும், சொகுசு பஸ்களில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதிநவீன பஸ்களில் 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 லிருந்து ரூ. 4 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிலைகளிலும் ரூ.1 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.18 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
மேலும், பேருந்து கட்டண குறைப்பால் நாள் ஒன்றிற்கு ரூ.4 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் முடிவடைந்துள்ளது. கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களிடன் பேட்டியளித்த மு.க. ஸ்டாலின் எதிர்கட்சிகள், மாணவர்கள் போராட்டத்தால் கண்துடைப்புக்கு பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அரசின் நிலைபாடுகளைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் கூடி முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
திருநாவுக்கரசர் பேட்டி: தமிழகம் முழுவதும் நாளை பேருந்து கட்டண உயர்வு கண்டித்து அனைத்துக் கட்சியினர் சார்பில் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
எடுத்துக்காட்டாக ஒரு கிலோ மீட்டருக்கு 42 பைசாவாக இருந்த பேருந்து கட்டணத்தை 60 பைசாவாக உயர்த்திவிட்டு, 2 பைசா குறைத்து, கிலோ மீட்டருக்கு 58 பைசாவாக நிர்ணயிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று சமூக வலைதளத்தில் கோபமாக மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.