கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மின்துறை அமைச்சராக நத்தம் விசுவநாதன் பதவி வகித்தபோது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்சாரம் கொள்முதல் செய்ததில், சுமார் 96,000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த ஊழல் என்பது முறையற்ற மின்திட்டங்களைத் தீட்டியதால் ஏற்பட்ட நஷ்டமா... அப்படியானால், எதற்காக அந்தத் திட்டம் தீட்டப்பட்டது... அதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் உரிய ஆவணங்கள் மூலம், மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தைத் தன்னுடைய ஆவணப்படத்தின் மூலம் அம்பலப்படுத்தியிருந்தார் பொறியாளர் காந்தி.
இந்த நிலையில், மின்சாரத் துறையில் நடந்துள்ள 3,000 கோடி ரூபாய் ஊழலை அதிரடியாக அம்பலப்படுத்தியுள்ளது அறப்போர் இயக்கம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் 2012 - 2016 உள்ளிட்ட 5 ஆண்டுகளில் 2.44 மெட்ரிக் டன் நிலக்கரியானது இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கான டெண்டரில் அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தத் தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றோம். இப்படி வாங்கப்பட்ட நிலக்கரியில் கொள்முதல் விலைக்கும், சந்தை விலைக்கும் 25% வித்தியாசம் கண்டறியப்பட்டது. இந்த 2.44 மெட்ரிக் டன் நிலக்கரியின் விலை ரூ.12,250 கோடி. இதில் ஆடிட்டிங் செய்த மத்திய தணிக்கைக் குழு பல முறைகேடுகள் நடந்திருப்பதைக் கண்டறிந்துள்ளது.
இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,730 கோடி முதல் ரூ.3,025 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடு தமிழகம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடந்திருப்பதாகவும், இது தந்திருக்கும் இழப்பு ரூ.30ஆயிரம் கோடியிலிருந்து ரூ.50ஆயிரம் கோடி வரை இருக்கலாம் என டி.ஆர்.ஐ மற்றும் சி.ஏ.ஜி. ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முறைகேட்டில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மின்சார வாரிய இயக்குனர் ஞானதேசிகன் உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளது. இந்த விவகாரம் குறித்து முறையான தகவல்கள் இருந்தும் டி.ஆர்.ஐ மற்றும் சி.பி.ஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாரியங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லப்பட்டன. ஆனால், அதற்கான முறையான காரணங்கள் தற்போதுதான் வெளியாகியுள்ளன. எங்களுக்குக் கிடைத்துள்ள ஆவணங்களை பிரசாந்த் பூஷன் வழக்கின் மூலம் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என அறப்போர் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்