குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

Special Correspondent

விசாரணையின் போது, குட்கா விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற மாநில அரசு தயங்குவது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் தமிழக அரசு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயங்குவதால், இந்த வழக்கை ஆழ்ந்து விசாரிக்க வேண்டியுள்ளதாக தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் ஏதோ தீவிரம் அல்லது சிக்கல் இருப்பதாகவே தோன்றுகிறது என்று கருத்துக் கூறினர்.

மேலும் வழக்கு விசாரணையின் போது ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு அரசு வழக்குரைஞர் ஆஜராகி வாதிடுவது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

முன்னதாக கடந்த வாரம் வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், 'குட்கா ஊழல் குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போதைய டிஜிபி எழுதிய கடிதம் சசிகலாவின் அறையில் கண்டெடுக்கப்பட்டது. குட்கா வியாபாரி மாதவராவ், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார்' என அவர் வாதிட்டார்.

மேலும், வருமானவரித் துறை தாக்கல் செய்த பதில் மனுக்களையும் அவர் படித்துக் காட்டினார். அப்போது நீதிபதிகள், 'மாணவர்கள், இளைஞர்களை பாதிக்கும் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அனுமதித்தது எப்படி? மூன்று மாநிலங்களில் நடந்துள்ள இந்த முறைகேட்டை தமிழக போலீஸாரால் எப்படி முழுமையாக விசாரிக்க முடியும்' என கேள்வி எழுப்பினார்.

திமுக எம்.எல்.ஏ., அன்பழகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், 'குட்கா ஊழலில் அமைச்சர், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என பலருக்கு தொடர்பு உள்ளது. எனவே இந்த வழக்கை போலீஸ் அதிகாரிகளால் விசாரிக்க முடியாது. எனவே வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தில்லியிலிருந்து ஹவாலா மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது' என்றார்.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், 'சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட 4,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 800 பேருக்கு சிறைத்தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. தமிழக போலீஸார் வேறு மாநிலங்களுக்குச் சென்று விசாரிக்க எந்தவிதமான தடையும் இல்லை.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சிபிஐ விசாரணை கோரக்கூடாது. வருமானவரித் துறை பறிமுதல் செய்த ஆவணங்களைக் கோரினோம். ஆனால் அவற்றைத் தர வருமானவரித் துறை மறுத்து வருகிறது.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கு முன் தமிழக அரசிடம் கருத்து கேட்பது அவசியம்' எனக் கூறி, லஞ்ச ஒழிப்புத் துறையின் சார்பில் ரகசிய அறிக்கையைத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.