சிங்கள தேசத்திலிருந்து முத்துக்களை எடுத்து வருவதற்காகச் சென்ற மேவார் மன்னன் ராவல் ரத்தன் சிங் (ஷாகித் கபூர்), அங்கு சிங்கள நாட்டு இளவரசி பத்மாவதியின் (தீபிகா படுகோனே) அழகில் மயங்குகிறான். பத்மாவதியும் ராவல் ரத்தன் மீது காதல் கொள்ள, இருவருக்கும் திருமணம் நடக்கிறது

Special Correspondent

மன்னனும், அரசியும் நெருக்கமாக இருந்ததை, திருட்டுத் தனமாகப் பார்த்தால், அரசியின் வேண்டுகோள்படி நாடு கடத்தப்படுகிறான் மேவார் நாட்டு ராஜகுரு, அந்த நேரத்தில், மாமனார் டில்லி சுல்தானைக் கொன்று அரியணையைக் கைப்பற்றிய அலாவுதீன் கில்ஜியிடம் (ரண்வீர் சிங்) சென்று பத்மாவதியின் அழகைப் பற்றிக் கூறுகிறார் ராஜகுரு. பெண்கள் மீது அதிக மோகம் கொண்ட அலாவுதீன் பத்மாவதியைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆசையில் மேவார் மீது போர் தொடுக்கக் கிளம்புகிறான்.

ஆறு மாதம் காத்திருந்தும் ராஜபுத்திர வீரர்களின் எதிர்ப்பால் வெற்றி பெற முடியாமல், சமாதானம் செல்கிறான் அலாவுதீன். அப்போது ராஜபுத்திர அரசுக்கு விருந்தினராக வரவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் வைக்கிறான். அதை ஏற்றுக் கொண்ட மன்னன் ராவல் ரத்தன் சிங், அலாவுதீனுக்கு விருந்தளிக்கிறான். அப்போது, திடீரென அரசி பத்மாவதியைப் பார்க்க வேண்டும் என்கிறான்.

சில விவாதங்களுக்குப் பின் பத்மாவதி சில கணங்கள் மட்டுமே காட்டப்படுகிறாள். பத்மாவதியை முழுமையாகப் பார்க்க வேண்டும் என நினைக்கும் அலாவுதீன், சதி செய்து ராவல் ரத்தன் சிங்கைக் கைது செய்து தில்லிக்கு அழைத்துச் செல்கிறான்.

கணவனை மீட்க பத்மாவதி, அலாவுதீன் வழியிலேயே சதி செய்து கணவனை மீட்டு வந்து விடுகிறாள். கோபமடையும் அலாவுதீன் மீண்டும், மேவார் மீது போர் தொடுக்கிறான். இதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் மீதிக் கதை.

சஞ்சய் லீலா பன்சாலியின் இசையில் பாடல்கள் தமிழிலும் ரசிக்க வைக்கின்றன. முதலில் தீபிகா படுகோனே அரண்மனையில் ஆடும் ஆட்டம் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும். சஞ்சித் பல்ஹாராவின் பின்னணி இசையும் குறிப்பிட வேண்டியது.

படத்தின் டைட்டில் கார்டிலேயே மாலிக் முகம்மது ஜெய்சியின் கவிதையை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். படத்தின் தயாரிப்பு வடிவமைப்பு, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் பிரமிக்க வைக்கின்றன.