சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்தரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்கவில்லை. ஆனால், விழா நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது விஜயந்திரர் மற்றவர்களுடன் சேர்ந்து எழுந்து நின்று மரியாதை செய்தார்.

Special Correspondent

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக காஞ்சி சங்கரமடம் விளக்கம் அளித்துள்ளது.

வழக்கமாக கடவுள் வாழ்த்து பாடலின் போது ஜெயேந்திரர், விஜயேந்திரர் தியான நிலையில் இருப்பது வழக்கம். அதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்தின் போது கடவுள் வாழ்த்து முறையை பின்பற்றி தியானத்தில் இருந்ததால் எழுந்து நிற்கவில்லை என்று விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அதிமுக அமைச்சர் பாண்டியரஜன் " தமிழ்த்தாய் வாழ்த்தின்போது விஜயேந்திரர் ஆழ்ந்த தியானத்தில் இருந்ததாக சொல்கிறார்கள். நானும் பார்த்தேன். அப்படித்தான் தெரிகிறது. அதன்பிறகு அவர் மற்ற நிகழ்வுகளில் பங்கேற்கிறார். மற்றபடி அவர் வேண்டுமென்றே செய்ததாக தெரியவில்லை. இது தேவையற்ற சர்ச்சை என்றே நான் பார்க்கிறேன். என்று கூறியுள்ளார்

விஜயேந்திரரின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. தாய்த் தமிழை மட்டுமின்றி தமிழக ஆளுநரையும் அந்த அவையையும் அவமதிக்கும் வகையில் அநாகரீகமாக நடந்துகொண்ட விஜயேந்திரர் மீது தமிழக அரசு உரிய வழக்கைப் பதிவுசெய்ய வேண்டும். அத்துடன் அன்னைத் தமிழை அவமதித்த விஜயேந்திரர் வெளிப்படையாக தமிழ்மக்களிடையே வருத்தம் தெரிவிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.’’ விஜயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழ்த் தாய் வாழ்த்தை காஞ்சி விஜயேந்திரர் அவமரியாதை செய்தது கண்டிக்கத்தக்கது என பமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தமிழ்த்தாயை அவமானப்படுத்தும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அகில இந்திய அனுமன் சேனா அமைப்பை சேர்ந்த ராமபூபதி ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அப்புகாரில், தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்து நிற்காத விஜயேந்திரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சமூகவலைதளத்திலே tamilinsulted என்கிற ஹாஸ்டக் வேகமாக வைரல் ஆகி வருகிறது.