ஆதாயம் தரும் பதவி வகித்ததாக கூறி, எம்எல்ஏ.,க்களை தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 20 ஆம்ஆத்மி எம்எல்ஏ.,க்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை இன்று விசாரித்த டெல்லி ஐகோர்ட், தேர்தல் ஆணையம் விதித்த தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து வருவதால் டெல்லியில் காலியாக உள்ள 20 இடங்களுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு உதவ 20 எம்.எல்.ஏ-க்கள் பார்லிமென்ட் செக்ரட்டரி எனப்படும் கேபினட் அமைச்சர் அந்தஸ்து உள்ள பதவியில் நியமிக்கப்பட்டனர்.
டெல்லி அமைச்சரவையில் அதிகபட்சம் 7 பேர் மட்டுமே அமைச்சராக முடியும் நிலை இருந்ததால், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு உதவ அந்த பதவியில் 20 எம்.எல்.ஏ-க்கள் நியமிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு புகார் அனுப்பப்பட்டது. புகார் குறித்து விசாரிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்த பரிந்துரையை ஏற்று, ஆம் ஆத்மி கட்சியின், 20 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
தெலுங்கானா மாநிலம் காங்., கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி என்பவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கும், தலைமை தேர்தல் கமிஷனருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏ.,க்களும், சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் 3 பேரும் ஆதாயம் தரும் பதவி வகிப்பதால் அவர்கள் 9 பேரையும் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் 9 பேரும் பார்லி., செயலாளர் பதவிகளையும் வகித்து வருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தவிர தெலுங்கானா கலாச்சார துறை தலைவர் பாலாகிருஷ்ண ரசமாயி, தெலுங்கானா போக்குவரத்து கழக தலைவர் சோமராபு சத்யநாராயணா, பஞ்சாயத் ராஜ் கிராமப்புற மேலாண்மை கழக தலைவர் பால்கொண்டா வி பிரசாந்த் ரெட்டி ஆகியோரும் ஆதாயம் பதவிகளை வகித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.