ரஷியாவிடம் இருந்து எஸ்-400 டிரையம்ஃப் ரகத்தைச் சேர்ந்த 5 இடைமறி ஏவுகணைகளை வாங்குவது தொடர்பாக மத்திய அரசின் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) பரிசீலித்து வந்தது. அதைத் தொடர்ந்து இந்த ஏவுகணைகளை வாங்குவதற்கு டிஏசி கடந்த 2015 டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது.

Special Correspondent

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடிக்கும் ரஷிய அதிபர் புதினுக்கும் இடையே கோவாவில் கடந்த 2016 அக்டோபர் மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, எஸ்-400 டிரையம்ஃப் ரகத்தைச் சேர்ந்த 5 இடைமறி ஏவுகணைகள், 4 கிரிகோரிவிச் ரக போர்க் கப்பல்கள், 200 காமோவ்-226டி இலகு ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு ரஷிய அரசுடன் மத்திய அரசு உடன்பாடு கண்டது.

இது தவிர, ஐஎன்எஸ் சக்ரா என்ற நீர்மூழ்கிக் கப்பலைத் தொடர்ந்து, அணுசக்தியில் இயங்கும் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பலை ரஷியாவிடம் இருந்து குத்தகைக்கு எடுக்கவும் இரு நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டது.

இவை அனைத்தும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.67,000 கோடி மதிப்பிலானவை.இந்நிலையில், 5 இடைமறி ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து வாங்குவதற்கு இறுதி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் அது ரஷியாவிடம் செய்து கொள்ளப்பட்ட மிகப்பெரிய தொகை அடங்கிய ஒப்பந்தமாக இருக்கும்.

இந்த ஒப்பந்தத்தை 2018-19ஆம் ஆண்டில் மேற்கொள்ள இந்தியா விரும்புகிறது. அதன்படி நம் நாட்டுக்கு தரையில் இருந்து புறப்பட்டு வானில் சென்று, எதிரிநாட்டு ஏவுகணைகள், ரகசிய விமானங்கள், உளவு விமானங்கள் உள்ளிட்டவற்றை தாக்கி அழிக்கக் கூடிய 5 ஏவுகணை அமைப்புகள், நவீன ராடார் சாதனங்கள் உள்ளிட்டவற்றை ரஷியா அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழங்கும்.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில் 'எதிரி நாடுகளின் பல்வேறு வகையான ஏவுகணை எதிர்கொண்டு அழிக்கும் திறன் படைத்த 5 இடமறி ஏவுகணைகளும் ரஷியாவிடம் இருந்து 54 மாதங்களுக்குள் நமக்கு வழங்கப்படும். இது இந்தப் பிராந்தியத்தின் வான் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும்' என்று தெரிவித்தன.