பச்சையப்பா கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் 13 நாள்கள் நடைபெற்ற 41-ஆவது சென்னை புத்தகக் காட்சி திங்கள்கிழமை நிறைவு பெற்றது.
இந்த புத்தகக் காட்சியில் ரூ.15 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பதிப்பகங்கள் பங்கேற்ற இந்த புத்தகக் காட்சியில் 710 அரங்குகளில் 5 லட்சம் தலைப்புகளில் சுமார் 1 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
திங்கள்கிழமை நடைபெற்ற நிறைவு நாளில் பள்ளிச் சிறார்களுக்கு திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியன நடத்தப்பட்டன. பேச்சுப் போட்டியில் 150 குழந்தைகளும், ஓவியப் போட்டியில் 250 குழந்தைகளும், திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் 350 குழந்தைகளும் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 1000, ஆறுதல் பரிசாக 32 குழந்தைகளுக்கு ரூ. 500 மதிப்பிலும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதுகுறித்து பபாசி தலைவர் வயிரவன் கூறியதாவது:
கடந்த ஜன.10- ஆம் தேதி தொடங்கி 13 நாள்கள் நடைபெற்ற இந்த புத்தகக் காட்சிக்கு 13 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாசிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'சென்னை வாசிக்கிறது' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
மேலும், பள்ளி மாணவ, மாணவியர் புத்தகக் காட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக 5 லட்சம் இலவச நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் ஏராளமான எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் புத்தகக் காட்சியில் கலந்து கொண்டனர். இம்முறை புத்தகக் காட்சியில் சுமார் ரூ. 15 கோடி மதிப்பில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன என்றார் வயிரவன்.