பாஸ்போர்ட்டின் வண்ணத்தை மாற்றுவது உட்பட பாஸ்போர்ட் வழங்குவதற்கான விதிகளில் பல மாறுதல்களை செய்துள்ளது இந்திய வெளியுறவு அமைச்சகம்.
பாஸ்போர்ட்டின் கடைசிப் பக்கத்தில், பெற்றோர் அல்லது கணவர் மனைவியின் பெயர் மற்றும் முகவரி இனிமேல் குறிப்பிடப்படாது என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இனிமேல் இரண்டு வகையான பாஸ்போர்ட் வழங்கப்படும். குடியேற்ற சோதனை தேவைப்படும் இ.சி.ஆர் பாஸ்போர்ட் (ECR, Emigration Check Required), மற்றும் குடியேற்ற சோதனை தேவைப்படாத இ.சி.என்.ஆர் (ECNR, Emigration Check not Required).
இந்தியாவில் இதுவரை கருநீல வண்ணம் கொண்ட பாஸ்போர்ட் மட்டுமே வழங்கப்பட்டது, ஆனால் இனிமேல் சிலரது பாஸ்போர்ட்கள் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
பாஸ்போர்ட்டின் வண்ணம் இ.சி.ஆர் நிலைப்பாட்டை (ECR) சார்ந்தது. இ.சி.ஆர். தகுதி கொண்ட பாஸ்போர்ட்கள் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
ஆனால் இ.என்.சி.ஆர் (ECNR) நிலையை உடையவர்களுக்கு நீல நிற பாஸ்போர்ட் வழங்கப்படும்.
விதிகள் படி, இ.சி.என்.ஆர் பாஸ்போர்ட் பெற தகுதியுடையவர்கள் 14 பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். உதாரணமாக 18 வயதிற்கும் குறைவானவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இ.சி.என்.ஆர் பாஸ்போர்ட் பெற தகுதியுடையவர்கள்.
அதேபோல், பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் இந்த பிரிவில் வருவார்கள்.
2007 ஜனவரிக்குப் பின் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்களின் கடைசி பக்கத்தில் இ.சி.ஆர் என்று எழுதப்பட்டிருக்கும். இ.சி.என்.ஆர் வகையின்கீழ் வரும் பாஸ்போர்ட்டில் தனியாக எதுவும் குறிப்பிடப்பட்டிருக்காது.
புதிய விதிகளின் கீழ், இ.சி.ஆர் பாஸ்போர்ட் ஆரஞ்சு வண்ணத்திற்கு மாற்றப்படும் . இது குடியேற்ற சோதனைகளின் செயல்முறையை எளிதாக்குகிறது என்பதோடு, இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் அதைப்பெறுவது சுலபம் என்கிறது அரசு துறை செய்தி பிரிவு .
இருப்பினும், புதிய பாஸ்போர்ட் பாகுபாட்டை அதிகரிக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். பாஸ்போர்ட்டின் வண்ணம் மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், "வெளிநாடுவாழ் இந்தியர்களை இரண்டாம் தர மக்களாக நடத்துவது சரியானது அல்ல, இது பாரதிய ஜனதா கட்சியின் பாகுபாடு காட்டும் மனோபாவத்தை பிரதிபலிக்கிறது" என்று சாடியிருக்கிறார்.