உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக நீதிபதிகள் 4 பேர் போர்க்கொடி உயர்த்தியிருப்பது போல், மத்திய அமைச்சர்களும், பாஜகவினரும் அச்சப்படாமல், ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதையே அவர் இவ்வாறு சூசகமாக குறிப்பிட்டுள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள் .

Special Correspondent

இதுகுறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: கடந்த 1975-1977ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நெருக்கடி நிலை இருந்தது போல தற்போது காணப்படுகிறது. நாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலையளிக்கிறது. இதுபோல், நாடாளுமன்ற நடவடிக்கைகள் சமரசத்துக்கு ஆளாவது, உச்ச நீதிமன்ற அலுவல் சரியாக இல்லாதது ஆகியவை ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஆகும்.

உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த மூத்த நீதிபதிகள் 4 பேர், ஜனநாயகத்துக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். அவர்களின் கருத்துக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஜனநாயகம் வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும். பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்களும் குரல் கொடுக்க வேண்டும். மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் தங்களது அச்சத்தில் இருந்து வெளிவந்து குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

உச்ச நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி இருப்பது போல், மத்திய அரசுக்கு பிரதமர்தான் முதன்மையானவர். அவரது அமைச்சரவை சகாக்கள், குரல் எழுப்ப வேண்டும். மத்திய அமைச்சரவையில் தற்போது அங்கம் வகிப்போர் அனைவரும் ஏதோ அச்சத்தில் இருப்பது எனக்கு நன்குத் தெரியும். இதுவும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்தான்.

உச்ச நீதிமன்ற விவகாரத்தில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது என்று கூறப்படுவதை ஏற்க முடியாது. உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 4 மூத்த நீதிபதிகள் செய்தியாளர்கள் முன்னிலையில் தங்களது பிரச்னை குறித்து தெரிவித்து விட்ட நிலையில், அதை உச்ச நீதிமன்றத்தின் உள்விவகாரமாக இனி எடுத்துக் கொள்ள முடியாது.

ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது குறித்து 4 மூத்த நீதிபதிகள் தெரிவித்திருக்கும் நிலையில், அதுகுறித்து அரசியல் கட்சிகளும், நாடாளுமன்றமும் பேசியாக வேண்டும்.

வழக்குகள் ஒதுக்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக 4 நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அந்த 4 நீதிபதிகளும், பாரபட்சம் காட்டப்பட்டு ஒதுக்கப்பட்ட வழக்குகள் எவை? என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜனவரி மாதம் 29இல் இருந்து பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதுபோல், குறுகிய காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வு நடத்தப்பட்டதை இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை என்றார் யஷ்வந்த் சின்ஹா.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா, பாஜக தலைமையிலான முதலாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய நிதியமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பல்வேறு விவகாரங்களிலும் யஷ்வந்த் சின்ஹா கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதையடுத்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அண்மையில் கருத்து தெரிவித்தபோது, 80 வயதில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார் என்று யஷ்வந்த் சின்ஹாவை கிண்டல் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது