வெள்ளிக்கிழமை காலை 12-01-2018 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி 40 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. இது குறித்த முக்கிய விவரத்தை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.

Special Correspondent

தற்போது ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி-சி 40 வகை ராக்கெட்டின் 42-ஆவது பயணம் ஆகும்.

பி.எஸ்.எல்.வி-சி 40 ராக்கெட்டின் முதன்மை செயற்கைக்கோளாக கார்டோசாட்-2 வகை செயற்கைகோள் ஏவப்பட்டுள்ளது. பூமியை படம் எடுத்து அனுப்பி நிலத்தில் ஏற்பட்டுள்ள புவியியல் மாற்றம் உள்ளிட்டவற்றை அறிய கார்டோசாட்-2 உதவும்.

710 கிலோ எடையுள்ள கார்டோசாட்-2 வகை செயற்கைக்கோளுடன் மேலும் 30 செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டுள்ளன.

அவற்றின் மொத்த எடை 613 கிலோ மட்டுமே. இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ள 31 செயற்கைகோள்களில் மூன்று மட்டுமே இந்தியாவுக்கு சொந்தமானவை.

மற்ற 28 செயற்கைக்கோள்களும் அமெரிக்கா, பிரிட்டன், தென்கொரியா, கனடா, பிரான்ஸ், பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு சொந்தமானவை.

இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆண்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வர்த்தக ரீதியாக செயற்கைகோள்களை ஏவ வெளிநாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படியே இந்த 28 ஏவுகணைகளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

கார்டோசாட்-2 உடன் இன்று விண்ணை நோக்கிப் பாய்ந்த மற்ற இரண்டு இந்திய செயற்கைக்கோள்கள் 100 கிலோ எடையுள்ள மைக்ரோசாட் மற்றும் இந்தியன் நேனோ சேட்டிலைட்-1சி (INS-1C) ஆகியன.