பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் ஜனவரி 4ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு, 8 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் பேருந்துகளை இயக்கியுள்ளனர். அதுவரை மிகக் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
பராமரிப்புப் பணி என்றால், எஞ்ஜின் ஆயில் மாற்றுதல், கியர் பாக்ஸ்ஸில் எண்ணெய் விடுதல் போன்றவை. நீண்ட தூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு குறிப்பாக டிரம் பிரேக்ஸின் பிரேக் ஷுக்கள் தினந்தோறும் பரிசோதிக்கப்படும்.
இதனால், பணிமனைகளில் இருந்த 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் வழக்கமான பராமரிப்புக்கு உட்படுத்தப்படாமலேயே இருந்த நிலையில் இன்று வேகவேகமாக அனைத்தும் பொங்கல் சிறப்புப் பேருந்துகளாக இயக்கத் தயாராகிவிட்டன.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் போது புறநகர்ப் பேருந்துகளை இயக்கினார். அது குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறர். "நான் பேருந்தை இயக்கியபோதுதான், எனக்குத் தெரிந்தது சாலையில் அனாதையாக விடப்படும் லாரிகளில் இருக்கும் பிரேக் பிளேட்ஸை விடவும் அரசுப் பேருந்துகளில் இருக்கும் பிரேக் பிளேட்ஸ் மிக மோசமான நிலையில் இருப்பது. சிஎம்பிடியில் இருந்து பேருந்தை இயக்கச் சொன்ன போது இரண்டு பேருந்துகளை இயக்கவே முடியாது என்று கூறிவிட்டேன். ஏன் என்றால், அதில் பிரேக் வேலை செய்யவே இல்லை. அதன் பிறகு ஒரு பேருந்தை இயக்கினேன். கடந்த 8 நாட்களில் 5 பேருந்துகளை இயக்கினேன். ஒன்றில் கூட பிரேக் சரிவர பிடிக்கவில்லை என்கிறார்"
இப்படி போதிய பராமரிப்பின்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 8 நாட்களாக அம்போ என விடப்பட்ட பேருந்துகள், சிறப்புப் பேருந்துகளாக மாறியிருப்பதால், ஊருக்குப் போகும் வரை சற்று அச்சமாகவே இருப்பதாக சில பயணிகள் கருத்துக் கூறியிருந்தனர்.