குட்கா விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Special Correspondent

அதில் குட்கா தொடர்பாக தாங்கள் அனுப்பிய ரகசிய கடிதம் போயஸ் கார்டனில் சசிகலா அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது என்று தெரிவித்ததோடு நில்லாமல் 2016 ஏப். 1 முதல் ஜூன் 15 வரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் வாக்குமூலம் அளித்ததாக பதில் மனுவில் தகவல் தெரிவிக்கபட்டு உள்ளது.

மேலும் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, முன்னாள் டிஜிபி எழுதிய ரகசிய கடிதம் கைப்பற்றப்பட்டது எனவும் தெரிவித்த வருமான வரி துறை ., சசிகலா அறையில் சிக்கிய கடிதம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கமளித்துள்ளது.

வருமானவரித் துறையினரின் பதில் மனுவை அடுத்து, வழக்கை வரும் 17-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக அமைச்சர் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா பெயர்கள் மீது தெரிவித்த ஊழல் குற்றசாட்டுகள் பரபரப்பை கிளப்பிய நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில் "அன்றைக்கு டிஜிபியாக இருந்த அஷோக்குமார் அவர்களின் ஒரிஜினல் கோப்புகளையும், அப்போது முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா அம்மையார் அவர்களின் போயஸ் இல்லத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியபோது எடுத்திருக்கிறார்கள். அவையும் இன்றைக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை இவ்வளவு பகிங்கரமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் குட்கா விவகாரத்தில் நடந்த உண்மைகளை தாக்கல் செய்துள்ள நிலையில், அன்றைக்கு போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரன் அவர்கள் இப்போது பதவி உயர்வு பெற்று, டிஜிபி பொறுப்பில் இருக்கிறார். எனவே, அவரை உடனடியாக டிஜிபி பதவியில் இருந்து நீக்க வேண்டும். அதேபோல, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் விலகவில்லை என்றால், முதலமைச்சர் அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையை, இன்றைய தினம் சட்டமன்றத்தின் நேரமில்லா நேரத்தில் நாங்கள் எழுப்பினோம். “அது நீதிமன்றத்தில் இருக்கிறது என்பதால் அதுபற்றி பேசக்கூடாது”, என்று சபாநாயகர் சொல்லி, எங்களை பேசவிடாமல் தடுத்துவிட்டார். எனவே, அதனைக் கண்டிக்கின்ற வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.