உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை; அரசியல் சாசன வரலாற்றில் இது அசாதாரண நிகழ்வு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கொகோய், குரியன் ஜோசப், மதன் லோகூர் ஆகிய 4 நீதிபதிகள் இன்று மதியம் 12.15 மணியளவில் தில்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதிகள் கூறியிருப்பதாவது, அரசியல் சாசன வரலாற்றில் இது அசாதாரண நிகழ்வு. உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நாங்கள் 4 பேரும் நீதித் துறையில் இருக்கும் பிரச்னைகள் குறித்த கடிதத்தை சில மாதங்களுக்கு முன்பே தலைமை நீதிபதிக்கு அனுப்பினோம். நீதித்துறையில் இருக்கும் குளறுபடிகள் குறித்து தலைமை நீதிபதியிடம் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை என்பதால் மக்களிடம் தெரிவிக்க விரும்பினோம்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. நீதித்துறையை சரிசெய்யாவிட்டால் நாட்டில் ஜனநாயகம் சீர்கெட்டுவிடும். எனவே, அசாதாரண சூழ்நிலையில் தான் செய்தியாளர்களைச் சந்திப்பதாக நீதிபதிகள் கூறினர்.
மேலும் அவர்கள் பேசுகையில், நீதித்துறை மீதான எங்கள் கவலையை மக்களுக்குக் கூற விரும்பியதால் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நீதித்துறையில் சுதந்திரம் இல்லை என்றால் ஜனநாயகம் நிலைக்காது. நீதித்துறையில் சில விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் பிரச்னைகள் உள்ளன என்று கூறினர்.
மேலும், உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் இருக்கும் பிரச்னைகள் குறித்து தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தை செய்தியாளர்களுக்கு வழங்குவதாகவும் கூறியுள்ளனர்.