சமீபத்தில் மகாராஷ்டிராவின் பல இடங்களில் தலித்துகளுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் நடைபெற்ற வன்முறை மோதல்களில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். கோரேகாவ் பீமா, பாபல், ஷிகர்பூர் ஆகிய இடங்களில் தொடங்கிய மோதல்கள் வன்முறையாக உருமாறின.

Special Correspondent

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 200 ஆண்டுகளுக்கு முன், கோரேகாவ் பீமா என்ற இடத்தில் 1818 ஜனவரி முதல் நாளன்று மராட்டிய அரசர் பேஷ்வாவுக்கு எதிராக நடைபெற்ற போரில், பேஷ்வா தரப்பு தோல்வியைத் தழுவியது. ஆங்கிலேயப் படையில் மஹர் தலித் மக்கள் இடம் பெற்றிருந்தனர்.

அப்போது நடைபெற்ற போரில் உயிரிழந்த மஹர்களின் நினைவாக கோரேகாவ் பீமாவில் நிறுவப்பட்டுள்ள வெற்றித் தூணுக்கு தலித் மக்கள் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

ஆனால், ஆங்கிலேயருக்கு ஆதரவாக அஞ்சலி செலுத்தப்படுவதாக கூறி மராட்டிய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

200வது ஆண்டான இந்த ஆண்டு நினைவு தினத்தன்று அஞ்சலி செலுத்தச் சென்ற தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் வன்முறை வெடித்தது, ஒருவர் கொல்லப்பட்டார், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

Special Correspondent

'A History of the Mahrattas' என்ற புத்தகத்தில் ஜேம்ஸ் கிராண்ட் டஃப் இந்தப் போரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இரவு முழுவதும் 800 மஹர் தலித் மக்கள் சண்டையிட்டு புத்தாண்டு காலை சுமார் பத்து மணிக்கு, பீமாவின் கரையில், அவர்கள் 28 ஆயிரம் மராட்டியர்களை தடுத்து நிறுத்தியிருந்தார்கள்.

அவர்கள் நதியை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது அவர்கள் நதியை கடக்க விரும்புவதாக பேஷ்வாவின் படையினர் நினைத்தார்கள், ஆனால், கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதியை கைப்பற்றிய அவர்கள், அதை தங்கள் நிலையாக மாற்றினார்கள்.

இந்தப் போரில் மஹர் தலித்துகளின் தைரியத்தைப் பற்றி 'இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் வரலாறு' (History of the Political and Military Transactions of India) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஹென்றி டி. பிரின்சேப்.

பிரிட்டன் அதிகாரிகளின் மதிப்பீடுகளின்படி, 500-600 பேஷ்வா படையினர் இந்த போராட்டத்தில் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.

மஹர் மற்றும் பேஷ்வாக்கள் இடையே நடைபெற்ற போரை வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு எதிரான இந்திய ஆட்சியாளர்களின் போராகவும் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். உண்மையில் அதில் தவறும் இல்லை.ஆனால் மஹர்களை பொறுத்தவரையில் அவர்கள் ஆங்கிலேயர்களுக்காக இந்தப் போரை நடத்தினார்கள் என்பதைவிட தங்களின் அடையாளத்திற்கான போராட்டமாகவே இதை கருதினார்கள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

பண்டைய இந்தியாவில் வருணாசிரம முறையில் 'தீண்டப்படாமைக்கு' ஆளான மக்கள் எப்படி நடத்தப்பட்டார்களோ, அதேபோல பேஷ்வா ஆட்சியாளர்கள் மஹர்களை நடத்தினார்கள்.

இதற்கான பல தகவல்களை வரலாற்று ஆய்வாளர்கள் பல இடங்களில் வழங்கியுள்ளனர். நகரத்திற்குள் நுழையும் மஹர்கள் தங்கள் இடுப்பில் ஒரு விளக்குமாற்றை கட்டிக்கொள்ளவேண்டும்., காரணம் மாசடைந்த மற்றும் தூய்மையற்ற'வர்களாக நடத்தப்பட்ட அவர்கள் நடந்து செல்லும்போது வீதிகளில் படியும் அவர்களின் அடிச்சுவடுகளை அந்த துடைப்பம் நீக்கிக்கொண்டே செல்லவேண்டும் என்பதற்காக.

அவர்கள் தங்கள் கழுத்தில் ஒரு பாத்திரத்தையும் தொங்கவிட வேண்டும். காரணம் அவர்களுக்கு வாயில் இருந்து எச்சில் வந்தால், வீதிகளில் துப்பினால் மாசுபடும் என்று கூறி கழுத்தில் கட்டியுள்ள பாத்திரத்தில் எச்சிலை துப்பிக்கொள்ளவேண்டும் என்ற நிர்ப்பந்தம்.

கிராமத்தில் உள்ள கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் இருந்து தாகத்திற்கு தண்ணீரை எடுப்பதை அவர்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாது.

வரலாற்று ஆசிரியரும் விமர்சகருமான பேராசிரியர் ரிஷிகேஷ் காம்ப்ளே கொரெகாவ் பீமாவின் மற்றொரு பக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறார். மஹர்கள் மராத்தியர்களை தோற்கடிக்கவில்லை, அவர்கள் வெற்றிகொண்டது பிராமணர்களையே.

தலித்துகள் மீது தீண்டாதவர்கள் என்ற முத்திரையை குத்தி, அவர்களை அடக்கி ஆண்டவர்கள் பிராமணர்கள் தான். தங்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைதான் மஹர்களை கோபப்படுத்தியது. அந்த வழக்கத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை பிராமணர்கள் ஏற்றுக்கொள்ளாததால்தான் அவர்கள் பிரிட்டிஷ் ராணுவத்துடன் இணைந்தார்கள்.

பிரிட்டிஷ் துருப்புக்கள் மஹர்களுக்கு பயிற்சி அளித்து, பேஷ்வாக்களுக்கு எதிராக போராட உத்வேகம் அளித்தன. மராட்டிய சக்தியின் பெயரில் உயர் மதிப்பு கொண்டிருந்த பிராமணர்களுக்கு எதிரான போராட்டம் அது. அவர்களையே மஹர்கள் தோற்கடித்தார்கள், உண்மையில் இது மராத்தாவுக்கு எதிரான போர் அல்ல.

மஹர் மற்றும் மராட்டியர்களுக்கு எதிரான கருத்து வேறுபாடோ, மோதலோ இதன் பின்னணி என்று வரலாற்றில் எங்கும் கூறப்படவில்லை என்று கூறும் காம்ப்ளே, தீண்டாமை என்ற கொடுமையை பிராமணர்கள் முடித்துவிட்டிருந்தால் இந்த போரே நடைபெற்றிருக்காது என்று சொல்கிறார்.

பிராமணர்கள் மாராட்டியர்களிடம் இருந்து அவர்களின் மதிப்பை பறித்ததால்தான் மராட்டியர்களின் பெயர் இந்த போரில் இடம் பெறுகிறது என்கிறார் காம்ப்ளே. இறுதியாக எஞ்சியிருந்த பேஷ்வாவின் பலத்தை அடக்க நினைத்த பிரிட்டிஷ் ராணுவம் மஹர்கள் கொண்ட படையை கட்டமைத்து பேஷ்வாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது.