உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உருளைக்கிழங்குகளின் மீதான கடும் விலைவீழ்ச்சியால் அதிருப்தியடைந்த விவசாயிகள், அழுகிய கிழங்குகளை முதல்வர் யோகியின் வீட்டு வாசலில் போட்டுச் சென்றுள்ளனர்.
உபி. அரசு சமீபத்தில் காய்கறிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்தது. அதில் உருளைக்கிழங்கிற்கான ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.487 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த விலை போதுமானதாக இல்லை என விவசாயிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டிருந்தது. மேலும், குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று அதிகாலை மினி லாரி ஒன்றில் அழுகிய உருளைக்கிழங்குகளை ஏற்றிவந்த விவசாயிகள், அவற்றை லக்னோவில் உள்ள முதல்வர் யோகியின் வீட்டுமுன் கொட்டிச் சென்றனர். இதையடுத்து, காவல்பணியில் ஈடுபட்டிருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து யோகி ஆதித்யநாத், ‘எமது அரசு விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியின் மீது வீண்பழி சுமத்துவதற்காக சிலர் இதுமாதிரியான அரசியல் சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.