இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல், சட்டத்தை வளைத்து சுற்றுச்சூழல் சட்டங்களை புறந்தள்ளி நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி தரத் தயாராகும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் தெரிவித்த விவரம் :
தேனி மாவட்டம் தேவாரம் அருகிலுள்ள பொட்டிபுரத்தில் அமையவிருந்த நியூட்ரினோ ஆய்வு அமைக்க, மத்திய அரசின் அணுசக்தி துறை வாங்கியிருந்த சுற்றுச்சூழல் அனுமதியை, "தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்" தென்னக அமர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி ரத்துசெய்து தீர்ப்பு வழங்கியது.
இந்தத் திட்டத்திற்கான அனுமதியை ஒரு சாதாரண கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி போல வாங்கப்பட்டுள்ளது. அதாவது சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையும், மக்களின் கருத்தைக் கேட்கவும் தேவையில்லை என்கிற நிலைப்பாட்டை இந்திய அணுசக்தி துறையின் சார்பில் எடுத்து வைத்தார்கள். அப்போது எங்கள் வழக்கறிஞர் தரப்பு எப்படி இது ஒரு தவறான வாதம் என்பதையும் எந்த பிரிவின் கீழ் அனுமதி வாங்கியிருக்கவேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டியபோது தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது.
நியூட்ரினோ திட்டத்திற்கான “சூழல் தாக்கீது அறிக்கை”யை தயார் செய்தது சலீம் அலி நிறுவனம். இந்த நிறுவனம் இது போன்ற ஆய்வுகளை தயார் செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்ல என்பதை நாங்கள் நிரூபித்தத்தை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது.
பல லட்சக்கணக்கான கிலோ வெடி மருந்துகளைப் பயன்படுத்தி, பல லட்சக்கணக்கான டன் பாறைகளை உடைக்கும்போது சூழலில் ஏற்படும் விளைவுகளை சூழல் ஆய்வு செய்த நிறுவனம் செய்யவில்லை என்பதை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது.
நீர்நிலைகள், நீர் அடுக்குகள் (aquifiers) பாதிக்கப்படாது என்பதற்கும் எந்த வித ஆய்வுகளும் இல்லை என்பதையும் தெளிவாக எடுத்துவைத்தோம்.
இறுதியாக எப்படி இந்தத் திட்டத்தில் பல விசயங்களை மூடிமறைத்துள்ளார்கள் என்பதையும் எடுத்துவைத்தோம். மதிகெட்டான் சோலை என்கிற தேசிய பூங்காவின் எல்லையில் இருந்து 4.9 கிலோ மீட்டர் தொலைவில் இந்தத்திட்டம் அமையவிருப்பதால் தேசிய வனவிலங்கு வாரியத்திடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி அனுமதியே வாங்கத் தேவையில்லை என்று சொன்னதை தீர்ப்பாயம் ஏற்றுக்கொள்ளவில்லை.
எங்கள் வாதங்களை ஏற்றுக்கொண்ட பசுமைத் தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் அனுமதியை செல்லாது என்று அறிவித்து, நியூட்ரினோ ஆய்வகம் தொடர்பாக புதிய விண்ணப்பம் செய்யப்படவேண்டும் என்றும், திட்டம் அமையிருக்கிற இடம் இரண்டு மாநில எல்லையில் இருந்து 10கி.மீ தூரத்திற்குள் இருப்பதால் இந்த திட்டம் "A" பிரிவு திட்டம்தான் என்று வரையறுத்து தீர்ப்பு வழங்கியது.
திட்டத்தை "நிறுவுவதற்கான ஒப்புதலை" வழங்கக்கோரி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கு பதில் அளித்த மாசு கட்டுப்பட்டு வாரியம் இந்தத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள தங்களிடம் துறை சார்ந்த அறிஞர்கள் கிடையாது என்றும் அதற்காக வல்லுநர் குழுவையும் அமைத்தது. இந்த நிலையில் கடந்த மாதம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற அணுசக்தி துறையின் ஆய்வுக்கூட்டத்தில், நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்ற சொல்லி இந்தியாவின் "தலைமை செயலரை" பொறுப்பாக நியமித்திருப்பதாக செய்திகள் வந்தன.
அதைத் தொடர்ந்து மத்திய அரசு துறை செயலர்களின் கூட்டமும் நடைபெற்று "சிறப்பு திட்டமாக" கருதி நியூட்ரினோ திட்டத்திற்கு பிரிவு "B" திட்டமாக கருதி சட்டத்திற்கு புறம்பாக "சுற்றுச்சூழல்" அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு செய்வது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். சட்டத்தை மதித்து கடைபிடிக்க வேண்டிய மத்திய அரசின் துறையே சட்டத்திற்கு புறம்பாக அனுமதி அளிக்க முயற்சிப்பது நிச்சயம் தவறான முன்னுதாரணமாகும்.
சட்டத்திற்கு புறம்பாக வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து சட்டப்போராட்டமும், மத்திய அரசின் சட்டவிரோத போக்கை எதிர்த்து மக்கள் மன்றத்திலும் போராடுவோம் என்று எச்சரிக்கை விடுக்கிறோம். மத்திய அரசின் அழுத்தத்திற்கு பணிந்து "திட்ட நிறுவுதல்" அனுமதியை தமிழக அரசு வழங்கக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.