இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது டுவிட்டர் பக்கத்திலும், ‘வாட்ஸ் அப்’ பிலும் புத்தாண்டு வாழ்த்து செய்தியை வெளியிட்டார். அந்த வாழ்த்து செய்தியில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம் படம் இடம் பெற்றிருந்தது.
அந்த படத்துக்கு கீழ் அவர், ‘‘புத்தாண்டில் உங்கள் மனம் முழுக்க எப்போதும் மகிழ்ச்சியும், குதூகலமும் நிறைந்து இருக்க வாழ்த்துகிறேன்’’ என்று கூறி இருந்தார். அவரது இந்த வாழ்த்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த முகம்மது சமிக்கு அம்மாநில முஸ்லிம் அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமி தனது வாழ்த்து செய்தியில் இந்து கடவுள் படத்தை பயன்படுத்தியதை ஏற்க முடியாது. சமி தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அழிவை சந்திக்க நேரிடும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆனால் இந்துக்கள் சமியின் புத்தாண்டு வாழ்த்தை வரவேற்றுள்ளனர். சமியின் மதச்சார்பற்ற, சுதந்திரமான சிந்தனையைப் பாராட்டி அவருக்கு ‘‘அம்ரோகா எக்ஸ்பிரஸ்’’ என்று பட்டம் சூட்டியுள்ளனர்.
சமியை பொருத்தவரை அவர் தனக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு, ஆதரவு இரண்டையுமே கண்டு கொள்ளவில்லை. கேப்டவுனில் உள்ள அவர் கிரிக்கெட் போட்டிக்கு தன்னை தயார்படுத்துவதில் தீவிரமாக உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது மனைவி ஜீன்ஸ் பேண்ட்டில் இருப்பது போன்ற படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஜீன்ஸ் பேண்ட்டில் இருக்கும் மனைவி படத்தை சமி உடனே நீக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தன. ஆனால் சமி அந்த நெருக்கடிக்கும், மிரட்டலுக்கும் கடைசி வரை அடி பணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.