ஜெயலலிதாவுக்கு உயிர் பிரிந்தது எப்போது, எம்பாமிங் பண்ணும்போது கால்கள் இருந்ததா என்று அரசு டாக்டரிடம் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது எழுப்பிய கேள்வியால் மருத்துவர் அதிர்ச்சி அடைந்து உள்ளதாக தகவல் கசிகிறது.
ஜெயலலிதா உடலநலக்குறைவு தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில் டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தாக அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது அவருடைய புகைப்படம் மற்றும் வீடியோ எதுவும் அரசு சார்பில் வெளியிடப்படவில்லை.
அப்போலா மருத்துவமனை சார்பில் தான் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடப்பட்டது. மக்கள் மத்தியில் இது குறித்து இப்போது வரை சந்தேகம் உள்ளது. குறிப்பாக ஜெயலலிதா இறந்த நிலையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அப்போது ஜெயலலிதாவின் கால்கள் நீக்கப்பட்டதாகவும் அதனால் தான் அவருடைய உடல் எம்பாமிங் பண்ணப்பட்டதாகவும் பல்வேறு வதந்திகள் பரவியது.
பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினரும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுப்பி வந்தனர். இந்த சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த கமிஷன் இதுவரை டாக்டர் சரவணன், மாதவன், கிருஷ்ணபிரியா, டாக்டர் பாலாஜி உள்பட பலரிடம் விசாரணை நடத்தி உள்ளது. தேவைப்படும்போது மீண்டும் விசாரிப்போம் என்றும் தெரிவித்தது. மேலும் பலருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா இறந்த பிறகு எம்பாமிங் செய்ய எம்எம்சி மருத்துவர் சுதா சேஷையன் தலைமையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் தலைவர் சுதா சேஷையனுக்கு விசாரணை ஆணையம் கடந்த 26ம் தேதி சம்மன் அனுப்பியது. அதன்பேரில் டாக்டர் சுதா சேஷையன் நேற்று காலை 10.10 மணியளவில் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.
அவரிடம் நீதிபதி 2.30 மணி நேரம் சரமாரியாக கேள்விகளை எழுப்ப திணறி போயுள்ளார் அவரிடம்:
1) ஜெயலலிதாவுக்கு எம்பாமிங் செய்த போது உங்கள் தலைமையிலான குழுவில் எத்தனை பேர் இருந்தனர்.
2) ஜெயலலிதாவுக்கு எப்போது உயிர் பிரிந்தது. ஜெயலலிதாவின் உடல் எப்போது, எந்த நேரத்தில் எம்பாமிங் செய்யப்பட்டது.
3) இதற்கான அனுமதியை யார் உங்களுக்கு வழங்கினர்.
4) எம்பாமிங் செய்யும்போது ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் யாரேனும் உடன் இருந்தார்களா அல்லது அரசு சார்பில் யாரேனும் இருந்தார்களா,
5) எதற்காக ஜெயலலிதா உடல் எம்பாமிங் செய்யப்பட்டது.
6) கரும்புள்ளிகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது, அப்படி எம்பாமிங் பண்ணும் போது கரும்புள்ளிகள் ஏற்படுமா,
7) எம்பாமிங் பண்ணும் போது ஜெயலலிதாவுக்கு கால்கள் இருந்ததா?
என்று பல்வேறு கேள்விகளை கேட்டதாகவும், நீதிபதி கேட்ட கேள்விக்கு டாக்டர் சுதா சேஷையன் பதில் அளித்ததாகவும். அவர் அளித்த பதிலை நீதிபதி பதிவு செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் விசாரணை முடிந்து வெளியில் வந்த சுதா சேஷையன் நிருபர்களிடம் கூறியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இறந்த பிறகு எம்பாமிங் செய்தது குறித்து கேட்டார்கள். நடந்ததை கூறினேன். அதை பதிவு செய்து கொண்டனர்.
நீதிபதி எந்தவிதமான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. என்று கேட்டார். அந்த விவரத்தையும் நீதிபதியிடம் கூறினேன். அதையும் பதிவு செய்து கொண்டனர்.
மேலும் எம்பாமிங் செய்து குறித்து ஏற்கனவே பத்திரிகையாளரிடம் கூறியிருந்தேன். 15 நிமிடம் முதல் 20 நிமிடம் ஆகும். அந்த விவரத்தை அப்படியே கூறினேன். எவ்வளவு நேரம் எம்பாமிங் செய்யப்பட்டது, என்று கேட்டதற்கு மிஷின் வைத்து பண்ணும் போது 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் போதும். வேறு என்ன கூறினீர்கள் என்று கேட்டதற்கு, உண்மையை அப்படியே கூறினேன். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் போது பார்த்தீர்களா என்று கேட்டதற்கு இல்லை மரணத்துக்கு பிறகு தான் பார்த்தேன். அவர்கள் இறப்பு சான்றிதழ் கொடுத்தார்கள். அதன்பிறகு தான் எம்பாமிங் செய்தோம்.
டிசம்பர் 5ம் தேதி இறந்ததாக அறிவித்த பிறகு இரவு 10 மணிக்கு சொன்னார்கள், நான் மருத்துவமனைக்கு போகும் போது இரவு 11.40 இருக்கும். அதன்பிறகு இரவு 12 மணிக்கு எம்பாமிங் பண்ண ஆரம்பித்தோம். சரியாக 15 நிமிடம் முதல் 20 நிமிடங்களில் எம்பாமிங் செய்தோம். அதாவது இரவு 12.15 மணி மற்றும் 12.20 க்குள் எம்பாமிங் செய்து முடிக்கப்பட்டது என்றார்.
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவில் அப்போலோ டாக்டர் சத்யபாமா இடம் பெற்றிருந்தார். அவருக்கு விசாரணை ஆணையம் இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி, இன்று டாக்டர் சத்யபாமா நீதிபதி முன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார்.
ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த விவரங்கள் 12 ஆவணங்கள் தொகுப்புகள் உள்ளது என்று விசாரணை ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது, அதற்கு ஆணையம் தரப்பில் எத்தனை தொகுப்புகள் இருந்தாலும் சிகிச்சை அளித்த முழு விவரங்களை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த விவரங்களை ஒப்படைக்குமாறு அப்போலோ நிறுவனர் பிரதாப் ரெட்டி அவரது மகள் பிரீத்தா ரெட்டி ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பியது. 10 நாட்களுக்குள் ஆதாரங்களை ஒப்படைக்கும்படி அதில் தெரிவித்து இருந்தது.
ஆனால் அப்போலோ நிர்வாகம் இரண்டு வாரம் கால அவகாசம் கோரியது இந்நிலையில் ஜனவரி 5ம் தேதி ஆவணங்களை ஒப்படைக்கும்படி விசாரணை ஆணையம் உத்தரவிட்டது மீண்டும் கூடுதல் கால அவகாசம் கோரி அப்போலோ நிர்வாகம் சார்பில் நீதிபதி ஆறுமுகசாமியிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வரும் 12ம் தேதிக்குள் ஆவணங்களை ஒப்படைக்கும் படி விசாரணை ஆணையம் காலஅவகாசம் வழங்கியதாக விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் நேரில் விசாரிக்க விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டது, அதேபோன்று ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமாருக்கு சம்மன் அனுப்ப ஆணையம் முடிவு செய்துள்ளது.
அடுத்த வாரம் இரண்டுபேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜாராக இருப்பதாக விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.