தனது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசிபெற்றார். சந்திப்பின் போது திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உடனிருந்தார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து நலம் விசாரித்தேன் என தெரிவித்தார்.
இதற்கிடையே கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் அரசியல் பண்பாட்டின் அடிப்படையால் கருணாநிதியை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார் என தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது: திமுக தலைவர் கருணாநிதியை ரஜினி சந்திப்பது புதிதல்ல. இதில் அதிசயப்பட ஒன்றுமில்லை. சந்திப்பின்போது அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற வந்ததாக ரஜினி தெரிவித்தார். புதிய கட்சி துவங்கும்போது விஜயகாந்தும் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். திராவிட கலாசாரம், பண்பாட்டின் அடிப்படையில் கருணாநிதியும் வாழ்த்தினார்.
திராவிட இயக்கத்தை அழித்துவிடலாம் என சிலரின் தூண்டுதல் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக மண் திராவிட இயக்கத்தின் மண். பெரியார், அண்ணா, கருணாநிதியால் பண்பட்டது தமிழக மண். யாராலும் திராவிடத்தை அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் தோற்றதுதான் வரலாறு. ரஜினி ஏற்கனவே ஆன்மீக அரசியல் நடத்த போவதாக தெரிவித்துள்ளார். ரஜினி ஆதரவு கேட்பாரா, வழங்கப்படுமா என்பது தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஆன்மிக அரசியல் என்று பேசியவர் கடவுள் ராமனை எந்த எஞ்சினீரிங் கல்லூரில் படித்தார் பாலம் கட்ட என்று வினவிய திமுக தலைவர் கருணநிதியை சந்தித்தது ., மற்றும் வடக்கில் ஹிந்துத்வ அரசியல் செய்து வரும் பிஜேபி அரசின் மோடி கோபாலபுரம் வருவதும் ஆன்மிகத்தின் காலத்தின் கட்டாயமா என்று மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்தது வைரல் ஆகி வருகிறது.