ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறிக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி லோக்பால் அமைப்பை உருவாக்க தயங்குவது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் மாத வாக்கில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது இங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சித்தராமய்யா முதல்வராக இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஒரு சில மாநிலங்களில் கர்நாடகம் முக்கியமானது.
எனவே இங்கு எப்படியும் ஆட்சியை தக்க வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ராம்துர்காவில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசிய போது "நாட்டின் காவலராக தன்னை காட்டிக் கொள்ளும் பிரதமர் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மோசடி நடக்க அனுமதித்தது எப்படி? ஏழை எளிய மக்கள், விவசாயிகளின் பணம், தேசத்தின் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு வசதிபடைத்தவர்களை பற்றி மட்டுமே கவலை உள்ளது. ஏழை, எளிய மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை. கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று வரும் மோடி, ஊழலுக்கு எதிராக உரையாற்றி வருகிறார்.
ஆனால் பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் ஊழலை பற்றி அவரால் பேச முடியுமா? குஜராத்தில் முதல்வர் பதவி வகித்தபோது, லோக் ஆயுக்தா அமைப்பை கொண்டு வர அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை. மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் லோக்பால் அமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஊழலை எதிர்ப்பதாக கூறும் அவர் லோக்பால் அமைப்பை ஏன் ஏற்படுத்தவில்லை" என ராகுல்காந்தி பேசினார்.
அமித்ஷா பேச்சுக்கு அம்மாநில விவசாயிகள் எதிர்த்த நிலையில் ராகுல் காந்தி பேச்சை கேட்க கூடும் கூட்டம் பாஜக வியுகத்துக்கு கவலை அளித்துள்ளது அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர் .