மேகாலயா ஆளுநரை தொடர்ந்து தென் மாநிலத்தை சேர்ந்த கவர்னர் மீதும் பாலியல் புகார் வந்ததால் மத்திய உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

Special Correspondent

மேகாலயாவில் பாலியல் குற்றச்சாட்டால் கவர்னரின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், தென் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு கவர்னர் மீது ராஜ்பவனில் பணியாற்றும் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மத்தியில் பாஜ அரசு பொறுப்பேற்ற பிறகு நியமிக்கப்பட்ட பல்வேறு மாநில கவர்னர்கள் ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. குறிப்பாக, பாஜ ஆட்சி செய்யாத டெல்லி, தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கவர்னரின் நடவடிக்கைகள், அரசியல் கட்சிகளால் பெரிதும் எதிர்க்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, மேகாலயா ஆளுநராக கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த வி.சண்முகநாதன் மீது பாலியல் புகார் எழுந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கவர்னர் பதவியின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில், கவர்னர் மாளிகைக்கே இளம்பெண்களை அழைத்து வந்து கிளப்பாக மாற்றிவிட்டார் என்றும், ராஜ்பவன் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆரம்பத்தில் பொய் புகார் என கூறப்பட்ட நிலையில், சுமார் 100 ஊழியர்கள் புகார் கடிதத்தில் கையெழுத்திட்டு ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பி வைத்ததும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

அதைத் தொடர்ந்து வி.சண்முகநாதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், தற்போது தென் மாநிலத்தை சேர்ந்த ஒரு கவர்னர் மீது ராஜ்பவனில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சம்மந்தப்பட்ட பெண்ணிடமிருந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி உளவுத்துறைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரகசிய விசாரணை தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டுக்கு ஆளான கவர்னரின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை... தற்போது தென் மாநிலங்களை பொருத்தவரையில், தமிழகத்தில் பன்வாரிலால் புரோகித், தெலங்கானா மற்றும் ஆந்திராவில் நரசிம்மன், கர்நாடகாவில் வஜூபாய் வாலா, கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த சதாசிவம், புதுவையில் கிரண்பேடி ஆகியோர் கவர்னர்களாக உள்ளனர். இவர்களில் நரசிம்மன் தவிர மற்றவர்கள் தற்போதைய பாஜ அரசினால் நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்.

கிரண் பேடி பெண் கவர்னர் என்பதால் அவரைத் தவிர்த்து மற்ற கவர்னர்களில் ஒருவர் மீதுதான் பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு கவர்னர் மாளிகைகளில் மீண்டும் ஒருமுறை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆய்வு செய்கிறேன் என்று ஆய்வு செய்யப்பட்ட இடத்தில் தான் குளித்ததை பார்த்தார் என்று எற்கனவே ஒரு பெண் புகார் கிளம்பிய நிலையில் சில மீடியாக்கள் தமிழ்நாடு நோக்கி பார்ப்பதால் பரபரப்பு கூடி உள்ளது...