இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக, 54 வயதில் மரணமடைந்துள்ளார்.

Special Correspondent

தமிழ் மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கமல், ரஜினி, சிரஞ்சீவி மற்றும் ரிஷிகபூர் என இந்திய சினிமாவில் பல உச்சநட்சத்திரங்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.

பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்த பின் படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஸ்ரீதேவி, 2012 ஆம் ஆண்டு வெளியான இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன்பின், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

1963ம் ஆண்டு சிவகாசியில் உள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன் – ராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, 1967-ஆம் ஆண்டு தமது 4 வயதில் துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

நடிகைகளில் சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற ஸ்ரீதேவியின் உண்மையான பெயர் "ஸ்ரீ அம்மா". பின்னர் சினிமாவிற்காக அந்தப் பெயரை ஸ்ரீதேவி என மாற்றிக்கொண்டார். 1979ம் ஆண்டு மூன்று முடிச்சு என்ற படத்தின் மூலம் 13 வயதில் ஹீரோயினாக அறிமுகமானார்.

1971-ஆம் ஆண்டில் பி.கே.பொற்றேகாட் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான பூம்பட்டா என்ற படம், சிறுமி ஸ்ரீதேவியை பிறவிக் கலைஞராக அடையாளம் காட்டியது.

அதில் சிற்றன்னையின்கொடுமைக்கு ஆளாகி மீளும் சாரதா என்ற சிறுமியாக முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்றுநடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதை 8 வயதில் பெற்றார்.

நடனம், நகைச்சுவை என பன்முகம் கொண்ட ஸ்ரீதேவி முதல் முறையாக 1983ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை ரீமேக் திரைப்படமான சத்மா -வில் ஒரு பாடலை பாடினார். இதே திரைப்படத்தில் இந்தியில் தனது சொந்த குரலில் முதல் முறையாக வசனம் பேசினார். இதைத் தொடர்ந்து சாந்தினி, கராஜ்னா, தெலுங்கு படமான க்ஷ்ணம் க்ஷ்ணம் ஆகிய படங்களிலும் ஸ்ரீதேவி பாடியுள்ளார்.

ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு திரைப்படங்களில் நடிக்க அவர் முதலில் தேர்வு செய்யப்படவில்லை. நாகினா என்ற படத்திற்கு முதலில் ஜெயபிரதாவும், சாந்தினி திரைப்படத்திற்கு ரேகாவும் முதலில் அணுகப்பட்டனர்.

அவர்கள் மறுத்ததால் அந்த வாய்ப்புகள் ஸ்ரீதேவிக்கு கிடைத்தன. தன்னுடைய 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில், 4 முறை சிறந்த நடிப்புக்காக பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அதோடு, பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் நடிகைகள் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலகங்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் "மறைந்த ஸ்ரீதேவியின், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு அமெரிக்க துணை தூதரகம் சார்பில் இரங்கலை தெரிவித்து, உலகம் முழுவதும் உள்ள மக்களை தனது நடிப்பால் ஈர்த்தவர் ஸ்ரீதேவி" என அமெரிக்க துணை தூதரகம் தெரிவித்துள்ளது.